டில்லி

விமான நிறுவனங்களில் பணியாற்றும் ஆண்களுக்கும் குழந்தை பிறந்தவுடன் விடுமுறை வழங்க வேண்டும் என மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறி உள்ளார்.

தற்போது ஆண்களுக்கும் மகப்பேறு காலத்தில் விடுமுறை வழங்க வேண்டும் என ஆண் ஊழியர்களிடையே கோரிக்கை எழுந்து வருகிறது.   இதற்கு வலு சேர்ப்பது போல்  மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா  “ஆண்களும் குழந்தைகளை வீட்டில் வளர்க்கும் பொறுப்பில் ஆண்களும் பங்கேற்க வேண்டும்.குறிப்பாக  விமான நிறுவனங்கள் பெண்களுக்கு ஆரோக்கியமான பணியிட சூழலை உருவாக்குவதில் தீவிரம் காட்டுகின்றன.

மேலும் மகப்பேறு விடுப்பு மற்றும் பிற கட்டமைப்புகள் போன்றவற்றின் அடிப்படையில் மிகப்பெரிய வேலையைச் செய்கின்றன. ஆயினும்  நாம் அதைத் தாண்டி செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன், ஆண்களுக்கும், பெண்களுக்கும்  பாலினம் பேதமின்றி, குடும்பச் சூழலைப் பொறுத்தவரை சமமான பொறுப்பைக் காட்டும் சூழலை நாம் உருவாக்க வேண்டும்.

ஆண்களும்  வீட்டில் குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பில் பங்கு கொள்ள வேண்டிய தந்தைவழி விடுப்பு என்ற கருத்தையும் நாம் பார்க்க வேண்டும். பல நிறுவனங்களில்  ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பை வழங்கினாலும், அவற்றில் பெரும்பாலானவை ஆண்களுக்கு ஒரே மாதிரியான கொள்கை இல்லை.ஆகவே ஆண்களுக்கும் தந்தைவழி விடுப்பை அளிப்பது பற்றி விமான நிறுவனங்கள் பரீசிலிக்க வேண்டும்” எனக் கூறி உள்ளார்.