புதுடெல்லி: மோசடி நடைபெறுவதை தடுக்கும் வகையில், ஏடிஎம் இயந்திரங்களில் ஒருவர் பணம் எடுக்கும் எண்ணிக்கைகளுக்கு இடையிலான காலஅளவுகளில் மாற்றத்தைக் கொண்டுவர டெல்லி மாநில-அளவிலான வங்கியாளர் கமிட்டி பரிந்துரை செய்துள்ளது.
இந்த ஏடிஎம் மோசடிகள் பெரும்பாலும் இரவிலிருந்து அதிகாலைக்கு இடையிலான நேரத்தில்தான் நடக்கின்றன. எனவே, பரிவர்த்தனைகளுக்கு இடையே காலஇடைவெளியைக் கொண்டு வருகையில் இத்தகைய மோசடிகளைத் தடுக்க முடியும் என்று கூறப்படுகிறது.
மொத்தம் 18 வங்கிகளிலிருந்து கலந்துகொண்ட பிரதிநிதிகள் கூட்டத்தில் இந்த பிரேரணை முன்வைக்கப்பட்டது. கடந்த 2018-19 நிதியாண்டு காலகட்டத்தில் டெல்லியில் மட்டும் 179 ஏடிஎம் மோசடி வழக்குகள் பதிவாகின. மராட்டிய மாநிலத்தில் அந்த எண்ணிக்கை 233.
நாடு முழுவதும் 2018-19 காலகட்டத்தில் நடந்த ஏடிஎம் மோசடிகளின் எண்ணிக்கை மட்டும் 980. ஆனால் அதற்கு முந்தைய ஆண்டில் அந்த எண்ணிக்கை 911 என்பதாக மட்டுமே இருந்தது.
மேலும், ஏடிஎம் இயந்திரங்களில் பணம் எடுக்கும்போது மொபைல் ஃபோனுக்கு வரும் ஓடிபி நடைமுறையைக் கொண்டு வரலாமா? என்பது குறித்தும் பரிசீலிக்கப்படுகிறதாம்.