புதுடெல்லி: பணியில் சேர்ந்த பிறகு, தங்களின் கல்வித்தகுதியை வளர்த்துக்கொள்ளும் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை, 5 மடங்கு உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கூறப்படுவதாவது; இதுவரை, பணியில் சேர்ந்தபிறகு, பணி தொடர்பான தங்களின் கல்வித் தகுதியை அதிகரித்துக்கொள்ளும் ஊழியர்களுக்கான ஊக்கத்தொகையின் அளவு, குறைந்தபட்சம் ரூ.2000 என்பதிலிருந்து, அதிகபட்சம் ரூ.10,000 என்பதாக இருந்தது.
ஆனால், தற்போது 7வது சம்பள கமிஷன் விதிமுறையின்படி, அந்த ஊக்கத்தொகையின் அளவு 5 மடங்குவரை உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், முன்பு குறிப்பிட்டதுபோல், உயர்கல்வி என்பது பணிக்கு தொடர்புடையதாக இருத்தல் வேண்டும்.
புதிய அறிவிப்பின்படி, இளநிலைப் பட்டப்படிப்பு, இளநிலை டிப்ளமோ, முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ மற்றும் முனைவர் பட்டப் படிப்பு ஆகியவற்றை நிறைவுசெய்யும் ஊழியர்கள், குறைந்தபட்சம் ரூ.10,000 என்பதிலிருந்து, அதிகபட்சம் ரூ.30,000 வரை ஊக்கத்தொகையாகப் பெறுவார்கள்.
– மதுரை மாயாண்டி