ஃபரிதாபாத்:

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் பசு பாதுகாவலர்களால் 5 பேர் தாக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

மாட்டு இறைச்சியை கொண்டு சென்றதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் இந்த கொடூர தாக்குதல் நடந்துள்ளது. மேலும், ஒரு ஆட்டோ டிரைவரையும் அந்த கும்பல் தாக்கியுள்ளது. ‘ஜெய் ஹனுமான்’ என்று கோஷமிட்டுக் கொண்டே தாக்கியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட நபர்கள் மீது மாட்டு இறைச்சி கடத்தியதாக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தாக்குதலில் ஈடுபட்ட பசு பாதுகாவலர்கள் மீது எவ்வித வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.

ஹரியானா மாநில ஆளுங்கட்சியான பாஜக.வின் தீவிர உறுப்பினரான ராமன் மாலிக் என்பவர் கூறுகையில், ‘‘எந்த ஒரு நபரும் மாட்டு இறைச்சியை கொண்டு சென்றால் போலீசார் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்வார்கள்’’ என்றார்.

கடந்த மாதம் உச்சநீதிமன்றம் அனைத்து மாநில அரசுகளுக்கு ஒரு உத்தரவிட்டது. அதில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மூத்த போலீஸ் அதிகாரியை தலைவராக கொண்டு பசு பாதுகாவலர்கள் மூலம் நடக்கும் அசம்பாவித சம்பவங்களை கண்காணித்து பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது.

கடந்த ஜூலை மாதம் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மாவட்டத்தில் பாஜக.வுடன் தொடர்புடைய ஒரு முஸ்லிம் பிரமுகரை பசு பாதுகாவலர்கள் நடுரோடில் அடித்து உதைத்தனர். இதை தொடர்ந்து ஹரியானா பால் விவசாயி பெக்லுகான் என்பவர் பசு பாதுகாவலர்களால் அடித்து உதைக்கப்பட்டார்.

அதோடு அஸ்ஸாம் மாநிலம் நாகான் மாவட்டத்தில் கால்நடை திருடர்கள் என்று கூறி இரு நபர்களை ஒரு கும்பல் அடித்து உதைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.