டெல்லி: கோல்கட்டா உயர்நீதிமன்ற நீதிபதிகள் இருவரிடையே யார் பெரியவன் என்ற அதிகார மோதல் சர்ச்சையான நிலையில், இதுகுறித்து உச்சநீதிமன்றம் இன்று விசாரணை நடத்துகிறது.

மேற்குவங்க மாநிலஅரசு ஏற்கனவே மத்தியஅரசு மற்றும் நீதித்துறை உத்தரவுகளை மதிக்காத நிலையில், அம்மாநில நீதிபதிகளின் நடவடிக்கைகளும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து, நீதிபதிகள் மோதல் தொடர்பாக,   உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன சிறப்பு அமர்வு விசாரித்து தீர்வு காண உள்ளது.

 மேற்குவங்க மாநிலத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட கோரி தொடரப்பட்ட வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு, கோல்கட்டா உயர்நீதிமன்ற நீதிபதி சோமன்சென் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் இடைகால தடை விதித்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவு தொடர்பான உண்மை அறிந்த மற்றொரு நீதிபதியான அபிஜித் கங்கோபாத்யாயா, தாமாக முன் வந்து வழக்கில் தலையிட்டு மீண்டும் சி.பி.ஐ., விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

விசாரணையில் மருத்துவகல்லூரி சேர்க்கையில் இடஒதுக்கீட்டு சலுகைக்காக போலி சாதி சான்றுகள் இணைத்திருப்பதும் இதில் அரசியல் பின்புலம் உள்ளதாகவும் தெரியவந்தது.

இந்த  நிலையில் இடைக்கால உத்தரவு பிறப்பித்த நீதிபதி சோமன் சென்னிற்கும், வழக்கை தாமாக எடுத்து மீண்டும் சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்ட நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாயாவிற்கும் இடையே யார் அதிகாரமுள்ளவன் என்ற ‛ஈகோ’ எழுந்தது.  இதையடுத்து, வழக்கை தானாகவே எடுத்து விசாரணை நடத்திய  அபிஜித் கங்கோபாத்யாயா இடமாற்றம் செய்ய அரசியல் ரீதியாக அழுத்தம் கொடுக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தது. இது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து,  நீதிபதி கங்கோபாத்யாயா, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டிடம் முறையிட்டு வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற வரலாற்றில் இது போன்ற வழக்கை சந்திக்காத உச்சநீதிமன்றம் , இதற்காக அரசியல் சாசன சிறப்பு அமர்வை ஏற்படுத்தியுள்ளது.

தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய சிறப்பு அமர்வு இன்று காலை 10:30 மணிக்கு நீதிபதிகளின் மோதல் தொடர்பாக  விசாரணை நடத்துகிறது.

ஒரே வழக்கில் ஆவணங்கள் இருந்தும் நீதிபதிகள் சிபிஐ விசாரணைக்கு தடை விதித்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

[youtube-feed feed=1]