மெல்போர்ன் :

ரோஹித் சர்மா, ரிஷப் பந்த், ஷுப்மன் கில், ப்ரித்வி ஷா, நவதீப் சைனி ஆகிய ஐந்து இந்திய கிரிக்கெட் வீரர்கள், கொரோனா கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டதால் அவர்களை தனிமைப்படுத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

வீரர்கள் தாங்கள் தங்கி இருக்கும் விடுதியை விட்டு வெளியே செல்ல அனுமதி வழங்கிய போதிலும், உணவகங்களின் உள்ளே அமர்ந்து சாப்பிடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

விடுதியை விட்டு வெளியில் செல்லும் வீரர்கள், திறந்த வெளியில் அமைந்திருக்கும் உணவகங்களில் மட்டுமே உணவருந்த அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த ஐந்து வீரர்களும், ஒரு உணவகத்தின் உள் அமர்ந்து உணவருந்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியதை அடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், நேற்று இவர்கள் வெளியில் சென்று உணவருந்திய விவகாரம் தெரியவந்தது.

இந்த வீடியோவை வெளியிட்ட நபர், இவர்களுக்கான கட்டணத்தை தான் செலுத்தியதாகவும், அதனை வீரர்கள் மறுத்ததாகவும், பின் தன் கோரிக்கையை ஏற்று அதனை அவர்கள் ஏற்றுக்கொண்டதாகவும் கூறி இருக்கிறார்.

மேலும், தன்னை கட்டிப்பிடித்து நன்றி சொன்ன வீரர்களுடன் தான் புகைப்படம் எடுத்துக்கொண்டதாகவும் பதிவிட்டுருந்தார்.

இந்த பதிவை கண்டு அதிர்ந்து போன ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், ஐந்து வீரர்களையும் மற்ற இந்திய, ஆஸ்திரேலிய அணி வீரர்களிடமிருந்து தனிமைப்படுத்த உத்தரவிட்டிருக்கிறது.

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் உரிய விசாரணை நடத்தி இந்த ஐந்து வீரர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கும் என்பது இனி தான் தெரியவரும்.

34 பேர் கொண்ட ஒரு பெரிய வீரர்கள் பட்டாளத்துடன் ஆஸ்திரேலியா சென்று இறங்கியுள்ள இந்திய அணி, இந்த தொடர் ஆரம்பித்தது முதல் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளது.

நவம்பர் 10 ம் தேதி அங்கு சென்று இறங்கிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, சிறப்பு சிகிச்சை என்ற பெயரில் மற்ற இந்திய வீரர்களிடம் இருந்து தனிமைபடுத்தி சொகுசு பங்களாவில் தங்கவைக்கப்பட்டார்.

பின்னர், முதல் டெஸ்ட் போட்டி முடிந்த நிலையில் மீதமுள்ள போட்டிகளில் விளையாடாமல் மூட்டை கட்டிக்கொண்டு இந்தியா திரும்பினார், விராட் கோலி .

தற்போது, ஐந்து பேர் சர்ச்சையில் சிக்கி இருக்கும் நிலையில், டெஸ்ட் அணியில் மீண்டும் மாற்றம் செய்யப்படுமா அல்லது இந்த வீரர்கள் தங்கள் பெட்டி படுக்கைகளோடு இந்தியா திருப்பி அனுப்பப்படுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதில், ரோஹித் சர்மா டிசம்பர் 16 ம் தேதி தான் ஆஸ்திரேலியா சென்றார் என்பதும் அவரது 14 நாட்கள் தனிமை தற்போது தான் முடிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.