ராமநாதபுரம்: மீன் பிடி தடை காலத்தையொட்டி, தமிழ்நாட்டில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள சுமார்  1.90 லட்சம் மீனவ குடும்பங்களுக்கு  நிவாரண தொகையாக ரூ.95.18 கோடி வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் மீன்பிடித்தடை காலம் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த காலக்கட்டங்களில் மீன்களின் இனப்பெருக்கம் என்பதால், மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்படு கிறது. அதன்படி, நடப்பாண்டு, ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த காலக்கட்டத்தில், மீனவர்களுக்கு அரசு நிவாரணம் வழங்கி வருகிறது. ராமநாதபுரம், துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, நாகை, தஞ்சை, சென்னை, கடலுார் உள்ளிட்ட 14 கடலோர மாவட்டங்களில் மீன்பிடி தொழில் நடக்கிறது.   இந்த தடைக்காலத்தில் விசைப்படகுகள் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் நாட்டுப்படகுகள், பைபர் படகுகளில் பாரம்பரிய முறைகளில் மீன்பிடிக்க அனுமதிக்கப்படுகிறது. இந்த காலக்கட்டத்தில், மீன்பிடி தொழிலுக்கு செல்லும் மீனவர் குடும்பங்கள் வருவாய் இன்றி பாதிக்கப்படுகின்றனர். இதற்காக ஆண்டு தோறும் தடைக்காலத்தில் மீன்பிடி தடைக்கால நிவாரணம் தமிழக அரசால் வழங்கப்படுகிறது.

நடப்பாண்டில் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ள நிலையில் தற்போது நிவாரணம் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் 14 கடலோர மாவட்டங்களை சேர்ந்த ஒரு லட்சத்து 90 ஆயிரத்து 365 மீனவர் குடும்பங்களுக்கு மீன் பிடி தடைக்கால நிவாரணமாக தலா ரூ.5000 வீதம் ரூ.95 கோடியே 18 லட்சத்து 25 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்படுகிறது. இந்த நிவாரணத் தொகை மீனவர்களின் வங்கி கணக்கில் விரைவில் வரவு வைக்கப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.