சென்னை: இலங்கை அதிபர் ரணில் இந்தியா வருகை தரும் நிலையில், தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்து பேசும்படி, பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
“இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாத்திட, இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி, அவர்களது உரிமைகள் மற்றும் சுதந்திரம் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்திட இலங்கை அதிபரை வலியுறுத்திட வேண்டும்” என வலியுறத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
மேலும், கச்சத்தீவை மீட்பது, இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாப்பது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது, கைது செய்யப்படுவது குறித்து இலங்கை அதிபரிடம் எடுத்து சென்று, சிறைபிடிக்கப்பட்ட மீன்பிடி படகுகளை நாட்டுடைமையாக்கும் சட்டத்தைத் திரும்பப் பெற தேவையான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதேபோல், இலங்கையில் உள்ள தமிழர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு ஆக்கபூர்வமான, உறுதியான தீர்வை எட்டுவதற்கு இலங்கை அதிபரை, பிரதமர் மோடி வலியுறுத்த வேண்டும் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.