ராமேஸ்வரம்:
ராமேஸ்வரம் மீனவர்கள் ஆறு பேரை, இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றுள்ளனர்.
ராமேஸ்வரத்திலிருந்து நேற்று 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றார்கள். நேற்று இரவு வழக்கமாக மீன்பிடிக்கும் பகுதிகளில் அவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது 3 சிறிய ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களின் படகுகளில் ஏறி மீன்பிடி சாதனங்களையும் தேசப்படுத்தியதோடு, மீனவர்களையும் கடுமையாக தாக்கினர்.
இதையடுத்து, ராமேஸ்வரத்தை சேர்ந்த சிங்கம்லியோன் என்பவரது படகினையும், அதில் இருந்த மகேஷ், கணேஷ், கேனோ உள்ளிட்ட 6 மீனவர்களையும் சிறை பிடித்து சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மற்ற மீனவர்கள் கரை திரும்பினர்.
மீன்பிடி தடை காலம் முடிந்த, ஒரு வார காலத்தில் இது போல தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது நான்காம் முறையாகும். இதுவரை மொத்தம் 21 தமிழக மீனவர்களையும், 4 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றிருக்கிறார்கள்.
சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமருக்கு ஒரே வாரத்தில் மூன்று முறை கடிதம் எழுதியுள்ளார்.