சிட்னி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் விளையாட தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய நடராஜன் , முதல் விக்கெட்டை வீழ்த்தி, சர்வதேச ஆட்டக்களத்தில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளார். அவருக்கு துணைமுதல்வர் ஓபிஎஸ் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தனது மகனின் வெற்றியால் ஊருக்கே பெருமை என நடராஜனின் தாய் பெருமிதத்துடன் தெரிவித்து உள்ளார்.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மொத்தம் 71 ‘யார்க்கர்’ பந்துகளை வீசி உலக கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் வீரர்களிடையே கவனத்தை ஈர்த்தவர் தமிழகத்தை சேர்ந்த டி.நடராஜன். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவரான இவர், தற்போது, இந்திய கிரிக்கெட் அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார். முதன்முறையாக சர்வதேச போட்டியில் அடியெடுத்து வைத்துள்ளார்.
தற்போது ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணியில் நடராஜன் இடம்பெற்றுள்ளார். அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்தியாவுக்காக பும்ராவும், நடராஜனும் பந்து வீசினர். இந்த போட்டிகளில் களமிறங்கி உள்ள நடராஜன், ஆஸ்திரேலிய நட்சத்திர ஆட்டக்காரராக மர்னஸ் விக்கெட்டை வீழ்த்தி, சர்வதேச போட்டியில் முதல்விக்கெட் எடுத்து சாதனை படைத்தார். தொடர்ந்தும் அபாரமாக பந்துவீசி வருகிறார் நடராஜன்.
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தனது முதல் விக்கெட்டை வீழ்த்திய நடராஜனை தொலைக்காட்சியில் பார்த்து குடும்பத்தினர் மகிழ்ந்தனர். சர்வதேச கிரிக்கெட்டில் முதல் விக்கெட் எடுத்த நடராஜனுக்கு சமூக வலைதளம் மூலம் பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்துச் செய்தியில், கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்காக தனது முதல் வெற்றிப்பயணத்தை துவங்கியிருக்கும் தமிழக வீரர் திரு.நடராஜன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்! தனது அபாரத் திறமையால் தாய்நாட்டிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்க்கும் நடராஜன் அவர்களின் சாதனைப்பயணம் தொடரட்டும் என தெரிவித்துள்ளார்.
நடராஜனுக்கு வாழ்த்து மழை குவிவதைக்கண்டு அவரது தாயார் மிகுந்த சந்தோசம் அடைந்துள்ளார். தனது மகனின் வெற்றியால் ஊருக்கே பெருமை கிடைத்து உள்ளது தெரிவித்து உள்ளார்.
மகன் நடராஜன் வெற்றி குறித்து கூறிய தாய் சாந்தா, ஓமலூர் அருகே சின்னப்பம்பட்டி என்ற சிறிய கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த நடராஜன் தற்போது வெளிநாட்டில் சென்று விளையாடுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அவரால் தான் இந்த ஊருக்கே பெருமை; இன்னும் சில விக்கெட்டுகளை வீழ்த்தி, நடராஜனால் இந்த போட்டியில் இந்தியா வெற்றி அடைந்தால் மிகவும் மகிழ்ச்சி என தெரிவித்து உள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள சின்னப்பம்பட்டி சேர்ந்த இளம் வீரர் நடராஜன் இவரது பெற்றோர் தங்கராஜ், சாந்தா ஆகியோர் இறைச்சிக்கடை வைத்தே பிழைப்பு நடத்தி வருகின்றனர். விளையாட்டில் ஆர்வம் கொண்ட நடராஜன், கிரிக்கெட் மீது அதீத மோகம் கொண்டவர். இவரது திறமையைக்கண்டு நண்பர்கள் உள்பட சிலர் உதவி செய்ததால், மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் நடைபெற்ற போட்டிகளில் விளையாடி அசத்தினார்.
இதைக்கண்ட இந்தியா சிமென்ட், கெம்பிளாஸ்ட் சன்மார் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது நிறுவனங்களாக அவரை விளையாட வைத்து வெற்றி கண்டன. முதன்முதலாக கடந்த 2014ஆம் ஆண்டு ரஞ்சிக் கோப்பையில் தமிழக அணிக்காகவும் விளையாடியுள்ளார். தொடர்ந்து, தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியில் திண்டுக்கல் அணிக்காக விளையாடினார்.
நடராஜனின் பந்துவீச்சை அடையாளம் கண்டு, பஞ்சாப் அணி அவரை மூன்று கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. அவரும் ஐபிஎல் போட்டியில் 71 ‘யார்க்கர்’ பந்துகளை வீசி கிரிக்கெட் உலகின் கவனத்தை தன்பக்கம் திருப்பினார். இதன் காரணமாக தற்போது முதன்முறையாக சர்வதேச போட்டியில் அடியெடுத்து வைத்ததுடன், முதல்விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தியுள்ளார்.