சிம்லா:
சுதந்திர இந்தியாவில் நடந்த முதல் தேர்தலில் முதல் ஓட்டு போட்டவருக்கு இப்போது வயது நூறு ஆகிறது. இதை ஒரு கிராமமே கொண்டாடியது.
இமாச்சல பிரதேசம் கின்னாவுர் மாவட்டம் சினி என்ற பகுதியில் 1917ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி பிறந்தவர் சியாம் சரண் நெகி. சுதந்திர இந்தியாவின் முதல் பொது தேர்தல் 1951ம் ஆண்டு அக்டோபரில் நடந்தது.
அப்போது அங்கு பனிப்பொழிவு காலம். இதனால் சினி உட்பட சில பகுதிகளில் முன்கூட்டியே ஓட்டுப் பதிவு நடந்தது. அதில் முதல் ஓட்டு போட்டவர் தான் இந்த நெகி. இதுவரை 16 நாடாளுமன்ற தேர்தல், 12 சட்டமன்ற தேர்தல்களில் ஓட்டு போட்டுள்ளார்.
கடந்த, 2014ம் ஆண்டு தலைமை தேர்தல் ஆணையராக இருந்த நவின் சாவ்லா நேரில் சென்று நெகியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது நடந்த நாடாளுமன்ற தேர்தலின் விளம்பர தூதராக நெகி நியமிக்கப்பட்டார்.
இவருக்கு தற்போது நெகிக்கு 100 வயதாகிறது. இந்த நிகழ்வை அவரது சொந்த ஊர் மக்கள் பெரும் விழாவாக கொண்டாடி வருகின்றனர். அவரது மனைவி ஹிராமணிக்கு 96 வயது. இந்த தம்பதிக்கு 9 பிள்ளைகள்.
இது குறித்து நெகி கூறுகையில்,‘‘ முதல் முறையாக ஓட்டு போட்டது இன்னும் நினைவில் இருக்கிறது. அப்போது முதல் இதுவரை நாட்டில் பல மாற்றங்கள் நடந்துள்ளது’’ என்றார்.