புதுச்சேரி,
தனது அரசியல் வாழ்க்கையில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு, வெற்றிவாகை சூடி முதன்முறையாக சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார் நாராயணசாமி.
புதுச்சேரி சட்டப் பேரவையில் முதன்முறையாக சட்டமன்ற உறுப்பினராக முதல்வர் நாராயணசாமி பதவியேற்றுக் கொண்டார்.
69 வயதாகும் நாராயணசாமி 1985, 1991, 2003ம் ஆண்டுகளில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்க பட்டார். 2009ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2008ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரையிலும், 2009ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரையிலும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய இணை அமைச்சராக நாராயணசாமி பதவி வகித்தார்.
கடந்த மே மாதம் நடைபெற்ற புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது. காங்கிரஸ் கட்சி தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி தேர்ந்தெடுக்கப்பட்டு, முதல்வராக பதவி ஏற்றார்.
ஆனால், அவர் தேர்தலில் போட்டியிடாமல் முதல்வர் பதவி ஏற்றதால், தேர்தல் ஆணைய சட்டப்படி 6 மாதத்திற்குள் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட வேண்டும்.
இதை கருத்தில்கொண்டு, நெல்லித்தோப்பு சட்டமன்ற உறுப்பினர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதைத்தொடர்ந்து நெல்லைத்தோப்பு தொகுதி இடைத்தேர்தல் கடந்த 19-ம் தேதி நடைபெற்றது. இதில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி 11 ஆயிரத்து 144 வாக்குகள் வித்தியாசத்தில், அதிமுக வேட்பாளர் ஓம் சக்திசேகரை தோற்கடித்தார்.
இதையடுத்து இன்று புதுச்சேரி சட்டப் பேரவையில் முதன்முறையாக சட்டமன்ற உறுப்பினராக நாராயண சாமி பதவியேற்றுக் கொண்டார். காலை 11 மணி அளவில் பேரவைத் தலைவர் வைத்திலிங்கம் அவருக்கு சட்டமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்து வைத்து வாழ்த்து தெரிவித்தார்.
சட்டப் பேரவை துணைத் தலைவர் சிவக்கொழுந்து, அமைச்சர்கள் நமச்சிவாயம், ஷாஜஹான், மல்லாடி கிருஷ்ணாராவ், கமலக்கண்ணன் மற்றும் காங்கிரஸ்-திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டு நாராயணசாமிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
முன்னதாக சட்டமன்றத்திற்கு பதவி ஏற்க வந்த நாராயணசாமியை, காரில் இருந்து இறங்கியதும், கட்சி தொண்டர்கள் அலெக்காக தூக்கியபடியே சட்டமன்ற வளாகத்துக்குள் கொண்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.