சென்னை: சென்னை சென்ட்ரலில் இருந்து பெங்களூருவுக்கு முதன் முறையாக வந்தே பாரத் ரயில் இன்று இரவில் இயக்கப்படுகிறது.
நாடு முழுவதும் வந்தேபாரத் எனப்படும் அதிவேக ரயில்சேவையை மத்தியஅரசு அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி, தமிழ்நாட்டில் இதுவரை 3 வந்தே பாரத் ரயில் சேவைகள் தொடங்கப்பட்டு புழக்கத்தில் உள்ளது. தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட பகுதியில் சென்னை – மைசூர், சென்னை – நெல்லை, சென்னை – கோவை, திருவனந்தபுரம் – காசர்கோடு ஆகிய வழித்தடத்தில் 3 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயிலுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
பயணிகளின் கூட்டத்தை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளில் தென்னக ரயில்வே ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் இன்று முதல் இரவு நேர வந்தே பாரத் ரயில் சென்னை சென்ட்ரல் – பெங்களுரூ இடையே இயக்கத் திட்டமிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, சென்னை சென்ட்ரலில் இருந்து பெங்களுரூக்கு இன்று இரவு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. இரவு நேரத்தில் இயக்குவது இது முதல் முறையாகும்.
இதுத் தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘’சென்னை சென்ட்ரல்-பெங்களூரு இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்தியாவிலேயே வந்தே பாரத் ரயில் முதல் முதலாக இரவு நேரத்தில் இயக்கப்பட உள்ளது. அந்தவகையில், சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று (20-ம்தேதி) மாலை 5.15 மணிக்கு வந்தே பாரத் சிறப்பு ரயில் (வண்டி எண்.06031) புறப்பட்டு அதே நாள் இரவு 10 மணிக்கு, பெங்களூரு சென்றடையும். மறுமார்க்கமாக, யஸ்வந்த்பூரில் இருந்து நாளை (21-ம்தேதி) இரவு 11 மணிக்கு வந்தே பாரத் சிறப்பு ரயில் (06032) புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும்’’ என குறிப்பிடப்பட்டுள்ளது.