அபுதாபி
கத்தோலிக்க கிறித்துவர்களின் தலைவரான போப் ஆண்டவர் வரலாற்றில் முதல் முறையாக அரபு நாடுகளில் பயணம் செய்து வருகிறார்.
இஸ்லாமியர்களின் நாடு என கருதப்படும் அரபு நாடுகளில் கத்தோலிக்க கிறித்துவர்கள் தலைவரான போப் ஆண்டவர்கள் யாரும் இதுவரை பயணம் சென்றதில்லை. அபுதாபியில் இன்று மத நல்லிணக்கக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்துக் கொள்ள தற்போதைய போப் ஆண்டவரான பிரான்சிசுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அதை ஏற்று அவர் கத்தோலிக்க வரலாற்றில் முதல் முறையாக தற்போது அரபு நாடுகளில் பயணம் மேற்கொண்டுள்ளார். அவருக்கு ஐக்கிய அரபு அமீரக அமைச்சர் அன்வர் கர்வாஷ் சிறப்பு வரவேற்பு அளித்துள்ளார்.
அமைச்சர் தனது டிவிட்டரில், ”மனித குலத்தின் மதிப்பு போப் ஆண்டவர் உருவில் இங்கு வந்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் சகோதரத்துவம், மற்றும் சகிப்புத் தனமையில் உலக வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கி உள்ளது” என பதிந்துள்ளார்.
இன்று நடைபெற்று வரும் மத நல்லிணக்க கூட்டத்தில் போப் ஆண்டவருடன் அபுதாபி இளவரசர், அவர் நண்பர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக் கொள்கின்றனர். அத்துடன் நாளை சயேத் விளையாட்டு அரங்கில் ஒரு சிறப்பு திருப்பலியை போப் நடத்த உள்ளார்.
இந்த திருப்பலிக்காக சுமார் 1,35,000 டிக்கட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. அது மட்டுமின்றி நேற்று அபுதாபியில் அமைந்துள்ள செயிண்ட் ஜோசப் பேராலயத்தில் நேற்று ஒரு திருப்பலியை போப் நடத்தினார். அதிலும் ஏராளமானோர் பங்கு பெற்றனர்.