டில்லி: நாட்டின் 15வது குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு கடந்த 25ந்தேதி (ஜூலை) பதவி ஏற்றுள்ள திரவுபதி முர்மு, முதன்முதலாக அரசு கோப்பில் கையெழுத்திட்டு உள்ளார்.  ஜம்மு – காஷ்மீர் உயர் நீதிமன்றத்துக்கு கூடுதல் நீதிபதியை நியமித்து தனது முதல் கையெழுத்தை 28ந்தேதி பதிவு செய்துள்ளார். அதன்படி,  ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக் உயர் நீதிமன்றத்துக்கான புதிய கூடுதல் நீதிபதியாக ராஜேஷ் செக்ரி நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

நாட்டின் 15வது குடியரசு தலைவருக்கான தேர்தலில் சுமார் 60சதவிகிதத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்று தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு வெற்றி பெற்றார். அதைத்தொடர்ந்து அவர் கடந்த 25ந்தேதி நாட்டின் புதிய குடியரசு தலைவராக பதவி ஏற்றார். அதைத்தொடர்ந்து அரசு கோப்புகளை பார்த்து வந்தவர், நேற்று முதன்முறையாக பணி நியமன உத்தரவில் நேற்று கையொப்பமிட்டார்.

பொதுவாக குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் பணி நியமன உத்தரவில் கையொப்பமிடுவது மரபு. அதன்படி, திரவுபதி முர்மு பதவி ஏற்ற பின்  ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக் உயர் நீதிமன்றத்துக்கான புதிய கூடுதல் நீதிபதியாக  ராஜேஷ் சிக்ரியை நியமித்துள்ளார். சிக்ரி, இரண்டு ஆண்டுகள் இந்த பதவியில் நீடிப்பார்.

இதுகுறித்து நீதித்துறை கூடுதல் செயலாளர் வெளியிட்ட அறிக்கையில், ‘இந்திய அரசியலமைப்பின் 224-வது பிரிவு (1) மூலம் வழங்கப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஐகோர்ட்டின் கூடுதல் நீதிபதியாக ராஜேஷ் செக்ரியை ஜனாதிபதி நியமித்துள்ளார்’ என்றார்.

இதைத்தொடர்ந்து மேலும்,  25 உயர்நீதிமன்ற  நீதிபதிகள் நியமனத்திற்கான உத்தரவுகளில் கையெழுத்திட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.