திருவனந்தபுரம்

திருவனந்தபுரம் துணை ஆட்சியராக இந்தியாவின் முதல் பார்வை இழந்த பெண் ஐஏஎஸ் அதிகாரி  பிரஞ்சால் பாட்டில் பதவி ஏற்றுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள உல்லாஸ்நகரைச் சேர்ந்தவர்  பிரஞ்சால் பாடில்.  இவர் தனது 6 வயதில் கண் பார்வையை இழந்தார்.   ஆயினும் இவர் மனம் தளராமல் தனது கல்வியைத் தொடர்ந்தார்.  தனது பள்ளிப்படிப்புக்குப் பிறகு மும்பை செயிண்ட் சேவியர் கல்லூரியில் அரசியல்  விஞ்ஞானத்தில் இளங்கலை பட்டம் பெற்றார்.

அதன் பிறகு டில்லி ஜவகர்லால் நேரு  பல்கலைக் கழகத்தில் சேர்ந்த பிரஞ்சால் பாடில் சர்வதேச தொடர்புத் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார்.  அவருடைய சிறுவயதுக் கனவான ஐஏஎஸ் தேர்வுக்காகப் பயிற்சிகளை மேற்கொண்டர்.  இதற்காக இவர் எழுத்துக்களை ஒலியாய் தெரிவிக்கும் மென்பொருள் மூலம் பாடங்களை பயின்று  வந்தார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு இவர் ஐ ஏ எஸ் தேர்வில் 773 ஆம் இடத்தைப் பிடித்தார்.   அதையொட்டி அவர் இந்திய ரெயில்வே கணக்குப் பிரிவில் நியமனம் செய்யப்பட்டார்.   இருப்பினும் பார்வைத் திறன் இல்லாதவர் என்னும் காரணத்தால் அந்தப் பணியில் அவரால் இணைய முடியவில்லை.  ஆகவே மிண்டும் 2017 ஆம் வருடம் ஐ ஏ எஸ் தேர்வு எழுதினார்.

இம்முறை அவர் 124 ஆம் இடத்தைப் பிடித்து ஐஏஎஸ் அதிகாரி ஆனார்.   அத்துடன் இந்தியாவின் முதல் பார்வைத் திறன் அற்ற பெண் ஐஏஎஸ் அதிகாரி என்னும் பெருமையைப் பிரஞ்சால் பாடில் பெற்றார்.  முசோரியில் நடந்த பயிற்சிக்குப் பிறகு எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இவ்ர் உதவி ஆட்சியராகப் பணி புரிந்தார்.

 

தற்போது இவர் இந்த அனுபவத்தின் அடிப்படியில் திருவனந்தபுரம் மாவட்ட  துணை ஆட்சியராகப் பதவி உயர்வு பெற்றார்.  நேற்று பிரஞ்சால் பாடில் திருவனந்தபுரம் மாவட்ட துணை ஆட்சியராகப் பொறுப்பு ஏற்றுள்ளார்.