சென்னை: கோவிலுக்குள் யாருக்கும் முதல் மரியாதை வழங்குவதோ, தலைப்பாகை, குடை பிடிப்பதோ கூடாது. அனைத்து பக்தர்களும் சமமாகவும், சம மரியாதையுடனும் நடத்தப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.
சமீப காலமாக கோவில்களுக்கு வரும் அரசியல்வாதிகளுக்கும், பணக்காரர்களுக்கும், கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை செய்யப்படுவதும், விருந்தினர்களுக்கு பரிவட்டம் கட்டி முதல் மரியாதை செய்வதும், சிலருக்கு கோவில் உற்சவர்கள் ஊர்வலத்தின்போது குடைகள் பிடிக்கும் நிகழ்வுகளும் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில், முதலமைச்சர் மனைவி துர்கா ஸ்டாலினுக்கு கோவில் குடை பிடித்த விவகாரமும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் ஏழை, நடுத்தர வர்க்க மக்களை கோவில் நிர்வாகம் முறையாக கவனிப்பதில்லை என்ற குற்றச்சாட்டுக்ளும் மேலோங்கி வருகின்றன. அதுபோல கிராம கோவில்களில் ஊர் தலைவருக்கு முதல்மரியாதை செய்யப்படும் வழக்கமும் தொடர்ந்து வருகிறது.
ஆனால், ஒருசில பகுதிகளில் ஜாதிய பிரச்சினை காரணமாக அவ்வப்போது மோதல்களும் தொடர்கின்றன. இதுதொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மதுரை கிளை, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கோவில்களில் சாமானியர்களுக்கு மரியாதை கொடுப்பது போன்ற வழக்குகள் இந்த நீதிமன்றத்திற்கு புதிதல்ல. உயர் நீதிமன்றம் பல வழிகாட்டுதல்களை ஏற்கனவே பிறப்பித்துள்ளது என்று சுட்டிக்காட்டியவர்,.
கோவிலுக்குள் யாருக்கும் முதல் மரியாதை வழங்குவதோ, தலைப்பாகை, குடை பிடிப்பதோ கூடாது. அனைத்து பக்தர்களும் சமமாகவும், சம மரியாதையுடனும் நடத்தப்பட வேண்டும். அதுபோல, யாரும் சிறப்பு மரியாதை வழங்குமாறு வற்புறுத்தவும் கூடாது. விழாவை அமைதியான முறையில் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.