டில்லி,
கில இந்திய காங்கிரஸ் துணைத்லைவர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் காரியக்கமிட்டி கூட்டம் இன்று கூடியது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு உடல்நலம் சரியில்லாததால், அவர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அதன் காரணமாக காங்கிரஸ் துணைத் தலைவரான ராகுல் காந்தி காரியக் கமிட்டி கூட்டத்துக்கு தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்தில் காரியக் கமிட்டி உறுப்பினர்கள்,  நிரந்தர அழைப்பாளர்கள் பங்கேற்றனர். காங்கிரஸ் மூத்த தலைவர்களான மன்மோகன் சிங், ப சிதம்பரம், குலாம் நபி ஆசாத், ஜனார்தன் திரிவேதி, அகமது படேல், அம்பிகா சோனி, ஏகே அந்தோணி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கட்சி தேர்தலை டிசம்பருக்குள் நடத்தி முடிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. மேலும், தற்போதைய அரசியல் நிலவரம் குறித்தும், உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தர காண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தல் குறித்தும் காரியக் கமிட்டி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 16-ந்தேதி தொடங்குகிறது. இதில் உறுப்பினர்கள் நடந்து கொள்ளும் விதம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

தற்போதைய ஜனநாயகம் இருண்ட நிலையில் காணப்படுகிறது. அரசு மேற்கொள்ளும் முயற்சிகள் சுதந்திரத்தை நசுக்கும் வகையில் உள்ளது. மாநில அதிகாரம் மூலமே இந்த ஆபத்தான நிலையை தோற்கடித்து வலுப்பெற முடியும்.
டி.வி.சேனல் மீது நடவடிக்கை, எதிர்க்கட்சியினர் கைது ஆகியவைதான் இந்த அரசாங்கத்தின் சாதனையாகும். மோடி அரசின் செயல்பாடுகள் ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் உள்ளது என்று  மோடி அரசை கடுமையாக தாக்கி ராகுல் காந்தி பேசினார்.
காங்கிரஸ் உயர் மட்ட தலைவர்கள் பங்கு பெற்ற இந்த வகை கூட்டத்திற்கு ராகுல் காந்தி தலைமை தாங்குவது இதுவே முதன்முறை.