நாமக்கல்: நாமக்கல் அருகே வீட்டில் நடத்தி வந்த பட்டாசு கடையில் இன்று காலை ஏற்பட்ட விபத்தில், 4 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வெடி விபத்தில் அந்த கடையில் இருந்த பெண் 50 அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார். இதுவரை 4 பேர் உயிரிழந்த நிலையில், 5 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். வெடி விபத்தில் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.
பட்டாசு தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. அதுபோல பட்டாசு கடை நடத்தவும் பல்வேறு கட்டுப்பாடுகள், விதிமுறைகள் உள்ளன. அதை ஆய்வுசெய்துதான் மாவட்ட நிர்வாகம், தீயணைப்பு துறை அனுமதி வழங்கி வருகிறது. ஆனால், இந்த அனுமதி பெறுவதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதால், பட்டாசால் ஏற்படும் வெடிவிபத்துகளும் அதிகரித்து வருகின்றன.
இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் மோகனூர் மேட்டுத்தெரு பகுதியில் தில்லை குமார் என்பவர் வீட்டில் நடத்தி வந்த பட்டாசு கடையில் இன்று அதிகாலை பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. புத்தாண்டையொட்டி, இன்று பட்டாசு விற்பனை களைகட்டும் என்ற ஆசையில், ஏராளமான பட்டாசுகளை வாங்கி வீட்டில் குவித்து வைத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில்தான் வீட்டில் இருந்த பட்டாசுகள் இன்று அதிகாலை 3.30 மணி அளவில் அதிக சத்தத்துடன் திடீரென வெடித்து சிதற தொடங்கியது. இதில் பட்டாசு கடை உரிமையாளரான தில்லைகுமார், அவரது மனைவி பிரியா, அவரது தாயார் செல்வி மற்றும் பக்கத்து வீட்டை சேர்ந்த பெரியக்காள் என்பவர் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். இதில் பட்டாசு கடை உரிமையாளரின் மனைவி உடல் சம்பவ இடத்தில் இருந்து சுமார் 50 அடி தூரத்தில் தூக்கி வீசப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சம்பவம் தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர், பட்டாசால் ஏற்பட்ட தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் பட்டாசு விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். அதில் 4 பேர் உயிரிழந்த நிலையில், 5 பேரை படுகாயங்களுடன் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
வீட்டில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்ததில் அக்கம் பக்கத்தில் உள்ள சுமார் 10க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. இந்த சம்பவம் குறித்து நாமக்கல் வட்டாட்சியர் ஜானகி மற்றும் டிஎஸ்பி சுரேஷ் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காவல்துறை, விசாரணையில், பட்டாசு குடோன் அமைக்க வேறு இடத்தை காட்டி அனுமதி பெற்ற நிலையில், வீட்டிலேயே முறைகேடாக பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரிய வந்துள்ளது.