தீ விபத்தால் எரிந்து நாசமான சென்னை சில்க்ஸ் கட்டிடம் ரூ.200 கோடிக்கு இன்சூரன்சு செய்யப்பட்டுள்ளதாக அதன் உரிமையாளர் கூறியுள்ளார்.
கடந்த 31ந்தேதி அதிகாலை 4.30 மணி அளவில் தி.நகரில் உள்ள பிரபலமான சென்னை சில்க்ஸ், ஸ்ரீகுமரன் தங்கமாளிகை கடையில் தீ பிடித்து எரிந்தது. 2 நாட்களாக எரிந்துவந்த தீயின் பாதிப்பு காரணமாக கட்டிடம் இடிந்து விழுந்தது. அதைத்தொடர்ந்து கட்டிடத்தை முழுவதுமாக இடித்து அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
கட்டட இடிப்பு பணி நடைபெறும் பஞ்சால சுப்ரமணியம் தெருவிலும், வடக்கு உஸ்மான் சாலையிலும், மருத்துவ உதவிக்காக குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
தீ விபத்துக்குள்ளான சென்னைசில்க்ஸ் மற்றும் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை முற்றிலும் சேதமடைந்துள்ளது. ஆனால், தங்கமாளிகையில் உள்ள தங்க, வைர, வெள்ளி பொருட்கள் அனைத்தும் பத்திரமாக லாக்கரில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த பாதுகாப்பு பெட்டகத்தில் சுமார் 250 கிலோ தங்கநகை, ரூ.30 கோடி மதிப்புள்ள வைர நகைகள், செவ்வாய்க்கிழமை வசூலான பணம் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன.
தீ விபத்து, கட்டட விபத்து என எத்தகைய சூழ்நிலையையும் தாக்கும் வகையில் இந்த பெட்டகம் வடிவமைக்கப்பட்டதாகும். இதனால் தற்போது ஏற்பட்டுள்ள விபத்தின் காரணமாக இப்பெட்டகம் பாதிக்கப்பட்டிருக்காது என கருதப்படுகிறது
மேலும் தீவிபத்துக்குள்ளான கட்டிடம் ரூ.200 கோடிக்கு இன்சூர் செய்யப்பட்டு உள்ளதாகவும் அதன் உரிமையாளர் மாணிக்கம் கூறியுள்ளார்.
மேலும், கட்டடம் முழுமையாக இடிக்கப்பட்ட பின்னர், அங்கு தீபாவளிக்குள் புதிய கட்டடம் கட்டப்படும் என்றும், இந்தக் கடையில் சுமார் ஆயிரம் ஊழியர்கள் வரை பணிபுரிந்து வந்தனர். அவர்கள் அனைவரும் வேறு கிளைகளுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தீ விபத்து குறித்து இன்சூரன்சு நிறுவன மேலாளர் கூறியதாவது,
சென்னை சில்க்ஸ் தீ விபத்து-விதிமீறல் பற்றி இறுதிக்கட்ட ஆய்வு அமர்வில்தான் முடிவு செய்யப்படும் என்று நியூஇந்தியஇன்சூரன்ஸ் மேலாளர் கூறியுள்ளார்.
மேலும் சென்னை சில்க்ஸ் கட்டடத்தை முழுமையாக ஆய்வுசெய்த பின் எவ்வளவு இழப்பீடு வழங்குவது என்பது பற்றி முடிவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.