வேலூர்
வேலூரில் உள்ள ஒரு தனியார் காப்பீட்டு அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டு கடும் போராட்டத்துக்குப் பின் அணைக்கப்பட்டுள்ளது.
வேலூரில் அண்ணாசாலையில் பொதுப்பணித்துறை அலுவலர்கள் குடியிருப்பு வளாகம் உள்ளது. அதன் எதிரே 3 மாடி கொண்ட தனியார் வணிக வளாகம் அமைந்துள்ளது. இங்குத் தரை மற்றும் முதல் தளத்தில் ஜவுளிக்கடை, 2 ஆம் தளத்தில் கல்வி நிறுவனம், மற்றும் 3 ஆம் தளத்தில் இரு தனியார் காப்பீடு நிறுவன அலுவலகம் உள்ளன..
நேற்று முன்தினம் இரவு தனியார் காப்பீட்டு நிறுவன அலுவலுவகத்தை ஊழியர்கள் பூட்டி விட்டு சென்றுள்ளனர். இந்த அலுவலகங்களுக்கு நேற்று விடுமுறை என்பதால் அலுவலகத்தில் யாரும் இல்லை. நேற்று இரவு 9 மணிக்கு இந்த அலுவலகங்களில் ஒன்றில் இருந்து கரும் புகை வெளியானது.
அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு மற்றும் காவல் நிலையங்களுக்குத் தகவல் அளித்துள்ளனர். அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்த போது தீயின் வெப்பத்தில் கட்டிடக் கண்ணாடிகள் வெடித்துச் சிதறியதால் தீயை அணைப்பது மிகவும் சிரமமாக இருந்துள்ளது.
தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்குப் பிறகு தீயை அணைத்துள்ளனர். இந்த விபத்தில் உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை எனத் தெரிய வந்துள்ளது. இந்த தீ விபத்து மின் கசிவு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.