ஹம்பி, கர்நாடகா
இந்திய பாரம்பரிய சின்னமான ஹம்பி கோவில் தூண்களை சேதப்படுத்திய 4 இளைஞர்களுக்கு நீதிமன்றம் தலா ரூ. 70000 அபராதம் விதித்து அந்த பணத்தில் தூண்கள் சரி செய்யப் படுகின்றன..
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹம்பியில் உள்ள விஷ்ணு கோவில் மிகவும் பழமை வாய்ந்ததாகும். இந்த கோவில் யுனெஸ்கோவால் பாரம்பரிய சின்னம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதைக் காண சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் வருகின்றனர். அவ்வாறு கோவிலைக் காண 4 இளைஞர்கள் ஒரு குழுவாக வந்துள்ளனர்.
அந்த இளைஞர்களின் பெயர்கள் ராஜ்பாபு, ராஜா, ராஜேஷ் சவுத்ரி மற்றும் ஆயுஷ் சாஹு ஆகும். இவர்களில் ராஜ்பாபுவும், ராஜேஷ் சவுத்ரியும் தினக்கூலிகளாக பணி புரிபவர்கள் இவர்கள் பிஹாரைச் சேர்ந்தவர்கள். ஆயுஷ் சாஹு என்பவர் டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் பணிபுரிகிறார். இவர் பெங்களூருவைச் சேர்ந்தவர். ராஜா பொறியியல் மாணவர்.
இவர்கள் நால்வரும் சேர்ந்து ஹம்பி விஷ்ணு கோவிலில் உள்ள தூண்களின் மீது ஏறி உள்ளனர். அத்துடன் அவற்றை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். இதில் ஆயுஷ் சாஹூ வீடியோ எடுக்க மற்றவர்கள் அந்த கோவில் தூண்களை உடைத்து அழித்துள்ளனர். வைரலான இந்த வீடியோ பதிவுடன் இந்திய தொல்லியல் ஆய்வகம் ஹம்பி காவல்துறையிடம் புகார் அளித்தது.
[youtube https://www.youtube.com/watch?v=eUZRAQGMoHI]
இது குறித்து விசாரித்த காவல்துறையினர் நால்வரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். வழக்கு பதிந்து விசாரணை நடத்திய நீதிமன்றம் இவர்களுக்கு தலா ரூ.70000 அபராதம் விதித்தது.
இந்த தொகையை வசூலித்த தொல்லியல் ஆய்வகம் சேதமடைந்த தூண்களை இந்த பணத்தைக் கொண்டு சீர் செய்யும் பணியை தொடங்கி உள்ளது.