டெல்லி: கொரோனா காலத்தில், அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கம் காரணமாக, கடனுக்கான வட்டித்தள்ளுபடி கோரி தொடரப்பட்ட வழக்கினைத் தொடர்ந்து, உச்சநீதி மன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில், 2 கோடி ரூபாய் வரையிலான கடன்களுக்கு கூட்டு வட்டி தள்ளுபடி செய்யும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
கொரோனா தொற்று பரவலால் தொழில் நிறுவனங்கள் முடங்கி, ஏராளமானோர் வேலைவாய்ப்பை இழந்ததால், அதனை கருத்தில் கொண்டு கடன் தவணைகள் மார்ச் 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 31ம் தேதி வரை 6 மாத காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்டன. ஆனால், இந்த 6 மாத காலத்திற்கு வங்கிகள் வட்டிக்கு வட்டி (கூட்டு வட்டி) விதித்தன.
கொரோனா காலத்தில் வங்கிக் கடன் தவணைகளுக்கு வட்டிக்கு வட்டி வசூலிக்கப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பான விசாரணை களின்போது, வீட்டுக் கடன், தனிநபர் கடன், கல்விக் கடன் உள்ளிட்ட தவணைகளுக்கு வட்டிக்கு வட்டி வசூலிக்கப்படாது என்றும் சிறு, குறு, தொழில் கடன் போன்றவற்றுக்கு வட்டிக்கு வட்டி இல்லை என மத்திய அரசு தெரிவித்தது. தொடர்பான விரிவான தகவல்களுடன் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது.
இந்த புதிய திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்தின்கீழ், மார்ச் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை 2 கோடி ரூபாய் வரையிலான கடன்களுக்கு கூட்டு வட்டி தள்ளுபடி செய்யப்படுகிறது. வீட்டுக்கடன், சிறுகுறு தொழில் நிறுவன கடன்கள், கிரெட்டி கார்டு, கல்வி மற்றும் தனிநபர் கடன்களுக்கு கூடுதல் வட்டி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மத்திய நிதித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.