டில்லி:

இந்தியாவில் உள்ள 7 ஐஐடி கல்வி நிறுவனங்களின் மேம்பாட்டிற்கு ரூ. 8 ஆயிரத்து 700 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்ய மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகம் பரிந்துரை செய்திருந்தது. இதை மத்திய நிதியமைச்சகம் தற்போது நிராகரித்துள்ளது.

இந்த நிதியை ஆண்டுக்கு ஆயிரத்து 250 கோடி ரூபாய் வீதம் செலவிட திட்டமிடப்பட்டிருந்தது. இதன் மூலம் இந்த கல்வி நிறுவனங்களின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது, வெளிநாட்டு பேராசிரியர்களை வரவழைத்து பாடம் நடத்துவது, சர்வதேச கல்வி நிறுவனங்களுடன் இணைப்பு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள இந்த நிதியுதவி செய்யப்படுகிறது.

தற்போது இந்த நிதியுதவியை வழங்க மத்திய நிதியமைச்சகம் மறுப்பு தெரிவித்திருப்பதால் இந்த கல்வி நிறுவனங்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து நிதியமைச்சக அதிகாரிகள் கூறுகையில், ‘‘கல்வி கட்டணம் நிர்ணயம் செய்தல், கார்பரேட் நிறுவனங்களிடம் இருந்து ஆதாரங்களை ஏற்படுத்துதல், முன்னாள் மாணவர்களை இதில் ஈடுபடுத்துதல், உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள ஐஐடி நிறுவனங்கள் கவனம் செலுத்த வேண்டும்’’ என்று நிதியமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

சமீபத்தில் வெளியான டைமஸ் உயர்கல்வி தர வரிசை பட்டியலில் முதல் 200 இடங்களில் இந்திய கல்வி நிறுவனங்கள் ஒன்று கூட இடம்பெறவில்லை. இது இந்திய கல்வியாளர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பின்னடைவு காரணமாக டில்லி, மும்பை, ரூர்கி, கவுகாத்தி, கான்பூர், சென்னை, காராக்பூர் ஐஐடி.க்கள் இந்த நிதியுதவி பெறுவதை மத்திய நிதியமைச்ககம் தடுத்து நிறுத்தியுள்ளது. குறிப்பாக இந்த நிதியுதவி ஐஐடி.க்களின் சர்வதேச தரத்தின் செய்லபாடு காரணமாகவே வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.