தென்னிதியாவின் அனைத்து மாநிலங்களிலும் பெரும்பான்மையாக பயன்படுத்தப்படும் தேங்காய் எண்ணெய், கேரளா மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் உணவுக்கான சமையல் எண்ணெயாகவும் பயன்படுத்தப்படுகிறது.

லிட்டர் கணக்கில் வாங்கி உபயோகிக்க முடியாத ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரும், சிறிய அளவில் அடைக்கப்பட்டு விற்கப்படும் பாட்டில்களை வாங்கி தங்கள் சமையலுக்கு சுவை கூட்டி வந்தனர்.

இந்நிலையில், ஒரு லிட்டருக்கும் குறைவான பாட்டில்களுக்கு ஜி.எஸ்.டி. வரியை 5 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தி இருக்கிறது மத்திய அரசு.

ஒரு லிட்டருக்கும் அதிகமாக வாங்குபவர்கள் மட்டுமே சமையலுக்கு பயன்படுத்துவதாகவும், குறைவாக எண்ணெய் வாங்குபவர்கள் உச்சி மண்டையில் தேய்த்துக்கொண்டு தங்கள் கேசத்தை அழகுற வைத்துக்கொள்ள மட்டுமே வாங்குவதாகவும் எண்ணி ஒரு லிட்டருக்கும் குறைவான அளவில் உள்ள பேக்கிங்குகள் அழகு சாதன பொருளாக தீர்மானித்து 18 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்படும் என்று கூறியுள்ளது.

மத்திய அரசின் இந்த முடிவுக்கு தேங்காய் அதிகம் விளையும் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, இம்மாநில மக்களின் அதிருப்திக்கும் உள்ளாகி இருக்கிறது.

மண்டை காயாமல் இருக்க சிறந்த நிவாரணமாக காலம் காலமாக தலைக்கு பயன்படுத்தி வரும் எண்ணெயாக மட்டும் இல்லாமல் சமையலில் பயன்படுத்தப்படும் எண்ணெய்களில் நல்ல எண்ணெயாக உள்ள தேங்காய் எண்ணெயின் விலைதான் இதுவரை மற்ற எண்ணெய்களை விட விலை குறைவாக இருந்த நிலையில் மத்திய அரசின் இந்த முடிவால், தேங்காய் எண்ணெயின் விலையும் தலையைப் பிய்த்துக்கொள்ளும் அளவுக்கு உயர்ந்துவிடும் என்று கூறப்படுகிறது.