டில்லி
பொருளாதாரம் சரிவடைந்துள்ளது என்பதை நிதி அமைச்சர் ஒப்புக் கொள்ள வேண்டும் எனக் காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்
கடந்த சில மாதங்களாக இந்தியப் பொருளாதாரம் கடும் சரிவைச் சந்தித்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் முடிவடைந்த காலாண்டுடன் தொடர்ந்து 5 காலாண்டுகளாக இந்த சரிவு தொடர்கிறது. பொருளாதாரத்தில் வேகமாக முன்னேறி வரும் உலக நாடு எனப் புகழப்பட்டிருந்த இந்தியா தற்போது மிகவும் பின் தங்கி உள்ளது. கடந்த 27 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாட்டின் உற்பத்தித் திறன் 5% ஆகக் குறைந்துள்ளது.
தற்போது கடும் வர்த்தக நெருக்கடியில் சிக்கியதால் பொருளாதாரத்தில் சரிந்து வரும் சீனாவை விட இந்தியா மிகவும் பின்னடைந்து வருகிறது. சீனாவின் உற்பத்தித் திறன் 6.7% ஆக உள்ளது. கடந்த 2018 ஜூன் மாதத்தில் இருந்தே நாட்டின் உற்பத்தித் திறன் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா பின் தங்குவது தொடர்கிறது இது குறித்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் செய்தியாளர்கள் கேள்விகள் எழுப்பினார்கள்.
அதற்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த பதிலில், “அரசு இது குறித்து தீவிர நடவடிக்கையில் உள்ளதால் பொருளாதாரம் நமது தேவைக்கு ஏற்ப வளர்ச்சி நிலையில் உள்ளது. இந்தியப் பொருளாதாரத்தின் ஒவ்வொரு பிரிவிலும் உள்ள குறைகளை அரசுக்குத் தெரிவிக்கும் போது நாம் அதற்கான தீர்வுகளை அளித்து பொருளாதார சரிவில் இருந்து மீட்டு வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் பொதுச் செயலரான பிரியங்கா காந்தி வதேரா தனது டிவிட்டரில், “அரசு பொருளாதாரம் சீர்குலைந்துள்ளதை ஒப்புக் கொள்கிறதா? இல்லையா? நிதி அமைச்சர் நமது நாட்டின் பொருளாதாரத்தை அரசியல் ஆக்காமல் சரிவை ஒப்புக் கொண்டு இந்திய மக்களுக்குத் தேவையான தீர்வை வழங்க வேண்டும். ஒரு பிரச்சினை இருப்பதையே ஒப்புக் கொள்ள முடியாதவர்களால் அந்த பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு அளிக்க முடியும்?” என நிர்மலா சீதாராமனைக் கேட்டுள்ளார்.