சென்னை: தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஏற்கனவே தெரிவித்தபடி 120 பக்க வெள்ளை அறிக்கையை இன்று வெளியிட்டார். கடந்த 10ஆண்டு அதிமுக ஆட்சியின் நிதி சீர்கேடு குறித்து அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 2001 – 2002 ஆம் நிதியாண்டில் அப்போதைய நிதியமைச்சர் பொன்னையன், அதற்கு முந்தைய 5 ஆண்டு திமுக ஆட்சியில் நடைபெற்ற வரவு செலவு தொடர்பான வெள்ளை அறிக்கையை வெளியிட்டிந்தார். அதையடுத்து, தற்போது திமுக அரசு, அதிமுக ஆட்சியின் 10ஆண்டு அதிமுக ஆட்சி கால நிதி நிலை குறித்த வெள்ளையை அறிக்கையை வெளியிட்டுள்ளது.
சென்னை தலைமை செயலகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட வருவாய் இழப்பு உள்ளிட்ட விவரங்கள் பற்றிய 120 பக்க வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார்.
பின்னர் செய்தியளார்களை சந்தித்த அமைச்சர், திமுக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட படி வெள்ளை அறிக்கை வெளியிடப்படுகிறது. இணையதளத்தில் இந்த வெள்ளை அறிக்கை முழுமையாக வெளியிடப்படும் என்றவர், முதல்வர் மு.க ஸ்டாலின் காட்டிய பாதையில் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. திமுகவின் இலக்கை தெரிவிப்பதற்காகவே வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது என்றார்.
மேலும், வெள்ளை அறிக்கை வெளியிடுவது தொடர்பாக, 2001இல் பொன்னையன் வெளியிட்ட வெள்ளை அறிக்கையும் ஆய்வு செய்தோம். ஆந்திரா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் வெள்ளை அறிக்கையை ஆய்வு செய்தோம். அதனடிப்படையிலேயே வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளோம். வெள்ளை அறிக்கையில் தவறு இருந்தால் அதற்கு நானே பொறுப்பு என்பதற்காக என் பெயர் அதில் இடம் பெற்றுள்ளது என்றார்.
மேலும் மாநிலத்தின் வளர்ச்சி, வேலைவாய்ப்பு எவ்வாறு உள்ளது என்பதை விளக்கியுள்ளோம். தமிழகத்துக்கு வரவேண்டிய வருவாய் குறைந்து விட்டது. 5 ஆண்டுகளில் எந்த மாநிலத்திலும் இந்த அளவுக்கு வருவாய் இழப்பு இல்லை. 2016 -21ல் அதிமுக ஆட்சியின் வருவாய் பற்றாக்குறை ரூ.1.50 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது என்றும் தெரிவித்தார். ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ.2,63,976 கடன் சுமை உள்ளது என்றும் கூறினார்.