புதுடெல்லி:

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பொய்களை கட்டவிழ்த்துவிடுவதாக காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா எம்பி ராஜீவ் கவுடா விமர்சித்திருக்கிறார்.


இது குறித்து ‘தி பிரிண்ட்’ இணையத்தில் அவர் எழுதியிருப்பதாவது:

ஏராளமானோர் முன்பு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை பத்திரிகையாளர் நேர்காணல் செய்யும் வீடியோ ஒன்றை பார்த்தேன்.
ரிசர்வ் வங்கியின் போர்டு உறுப்பினர் பதவிக்கு குருமூர்த்தி போன்றவர்களை நியமித்ததன் மூலம் ரிசர்வ் வங்கி அரசியலாக்கப்பட்டதா? என கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதில் அளித்த அருண் ஜெட்லி, “காங்கிரஸ் ராஜ்யசபா எம்பியாக இருக்கும் ஒருவரை, ரிசர்வ் வங்கியின் உறுப்பினராக ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நியமித்தது என பதில் அளித்தார்.

எவ்வளவு பெரிய பொய் இது. ரிசர்வ் வங்கி போர்டு உறுப்பினராக இருந்தபோதுதான் காங்கிரஸின் ராஜ்யசபா எம்பி வேட்பாளராக அறிவிக்கப்பட்டேன்.
எம்பியாக தேர்வு செய்யப்பட்டதும், ரிசர்வ் வங்கியின் போர்டு உறுப்பினராக தொடர முடியாது என அதிகாரிகள் அறிவித்தனர்.

இரு பதவிகளில் தொடர முடியாது என்பதால், ரிசர்வ் வங்கி போர்டு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தேன். பாஜக ஆட்சி அமைந்த ஒரு சில மாதங்களில் நான் எம்பியாகிவிட்டேன்.

ஆனால், நான் எம்பியாக இருக்கும்போது ரிசர்வ் வங்கி போர்டு உறுப்பினராக இருந்தது போன்று ஒரு பொய்யை சொல்கிறார்.

இதேபோல் ரஃபேல் விவகாரத்திலும் நிதி அமைச்ர் அருண் ஜெட்லி நீதிமன்றத்தில் பொய் சொன்னார்.
36 ரஃபேல் போர் விமானங்களை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை விட 3 மடங்கு அதிகம் கொடுத்து வாங்கி மோடி முடிவு செய்தார்.
ஆனால் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், மத்திய தணிக்கைக்குழு கொள்முதல் கொள்கை குறித்து ஆராய்ந்து, எல்லாம் சரியாக இருப்பதாக கூறியுள்ளதாக அருண் ஜெட்லி தெரிவித்திருந்தார். இதன்காரணமாக அந்த வழக்கை முடித்து வைத்தது உச்ச நீதிமன்றம்.

ஆனால், இந்த விமானங்களை வாங்க அனில் அம்பானியின் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்ட விவரத்தை சொல்லவில்லை. இந்திய பேச்சுவார்த்தைக்குழு பேரம் பேசிக் கொண்டிருந்தபோது,பிரதமர் அலுவலகம் ரஃபேல் பேர ஒப்பந்தம் செய்து கொண்டதையும் அவர் நீதிமன்றத்துக்கு தெரிவக்கவில்லை.

மத்திய தணிக்கைக் குழு அதுபோன்ற ஒரு ஆய்வை செய்யவில்லை. இதற்கு நாடாளுமன்றக் குழு ஒப்புதலும் அளிக்கவில்லை. நானும் நாடாளுமன்றக் குழுவில் உறுப்பினராக இருப்தால் சொல்கிறேன்.
நீதிமன்றத்திலேயே பொய் சொல்லியிருக்கிறார் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி. ரஃபேல் பேர ஊழலை மறைக்க அருண் ஜெட்லி முயற்சித்துக் கொண்டிருக்கிறார்.

மோடி அரசு ரிசர்வ் வங்கியின் மாண்பை சீர்குலைத்துவிட்டது என்பதுதான் உண்மை.
மோடியும், அருண்ஜெட்லியும் சேர்ந்து பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கொண்டு வந்ததால், பொருளாதாரத்தில் பெரும் பின்னடைவை  நாடு சந்தித்துக் கொண்டிருக்கிறது.

ஒன்று பொய், அடுத்தது கெட்ட பொய். இறுதியாக புள்ளிவிவர பொய் என்று பொய்யை 3 வகையாக பிரிக்கிறார் 19-ம் நூற்றாண்டு எழுத்தாளரான பெஞ்சமின் டிஸ்ரேலி.

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் உலக வெப்பமயமாதல் குறைந்துள்ளதாககூட அருண் ஜெட்லி பொய் சொல்வார்.

இவ்வாறு அவர் எழுதியுள்ளார்.