மும்பை

நிதி அமைச்சர் கடந்த 3 நாட்களாக அறிவித்து வரும் நிவாரண உதவிகள் மதிப்பு ஜிடிபியில் 0.34% மட்டுமே என நிதி ஆய்வு நிறுவனமான பார்கிளேஸ் தெரிவித்துள்ளது.

கொரோனா பரவுதலைக் கட்டுப்படுத்த இந்தியாவில் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கின் மூன்றாம் கட்டம் இன்றுடன் முடிவடைய உள்ளது.  இதையொட்டி கடந்த 12 ஆம் தேதி அன்று பிரதமர் மோடி தொலைக்காட்சியில் உரையாற்றினார்.  அப்போது அவர் 4 ஆம் கட்ட ஊரடங்கு புதிய கட்டுப்பாடுகளுடன் தொடரும் என அறிவித்தார்.

பிரதமர் தனது உரையில் மக்களுக்கு உதவ ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான நிவாரண உதவிகள் அதாவது ஜிடிபியில் 10% அளிக்கப்படும் என அறிவித்தார்.   இந்த நிவாரண உதவி விவரங்களை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மூன்று பாகங்களாக  தெரிவித்தார். இன்று இதன் இறுதி பாகத்தை அளிக்க உள்ளார்.  அமைச்சர் இதுவரை ரு15.75 லட்சம் கோடிக்கான விவரங்களை அளித்துள்ளார்.

இது குறித்து பிரபல நிதி ஆய்வு மற்றும் தரகு நிறுவனமான பார்கிளேஸ், “மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி இணைந்து இதுவரை ரூ.15 லட்சத்துக்கும் அதிகமான நிவாரண உதவிகளை அறிவித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.   ஆனால்  இதுவரை அறிவிக்கப்பட்ட  உதவிகளின் மதிப்பு உண்மையான நிதி தாக்கத்தின் அடிப்படையில் ரூ.66,500 கோடி மட்டுமே ஆகும்.   அதாவது நாட்டின் ஜிடிபியில் 0.4% மட்டுமே ஆகும்.: எனத் தெரிவித்துள்ளது.