டில்லி
செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூ.500 மற்றும் ரூ. 1000 நோட்டுக்களில் வங்கிகளில் செலுத்தப்படாதவை எல்லாம் கருப்புப் பணமாக இருக்க வாய்ப்பில்லை என பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
ரிசர்வ் வங்கி தன் ஆண்டு அறிக்கையில், சுமார் ரூ.16000 கோடி மதிப்புள்ள நோட்டுக்களை தவிர மற்ற ரூ.500 மற்றும் 1000 நோட்டுக்கள் திரும்ப வந்து விட்டதாக தெரிவித்துள்ளது. வங்கிகளில் அதிக அளவில் செலுத்தப்பட்ட தொகை குறித்த விவரங்கள் இன்னும் சரி பார்க்கப்படாததால் கருப்புப்பணம் எவ்வளவு வெள்ளையாக்கப் பட்டுள்ளது என்பது சரிவரத் தெரியவில்லை. இந்நிலையில் வங்கிகளில் செலுத்தப்படாத ரூ.16000 கோடி முழுவதும் கருப்புப் பணமாக இருக்க வாய்ப்பில்லை என பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர்.
அவர்களின் கூற்றுக்கு தரும் விளக்கமானது :
நேபாளத்தில் இந்திய கரன்சி புழக்கத்தில் உள்ளது. அந்நாட்டின் மத்திய வங்கியின் அறிவிப்புப் படி சுமார் ரூ.3500 கோடி மதிப்புள்ள செல்லாத நோட்டுக்கள் நேபாள நாட்டில் உள்ளது. அவைகளை மாற்ற இன்னும் ரிசர்வ் வங்கி அனுமதிக்கவில்லை.
பூட்டானிலும் ரிசர்வ் வங்கி அனுமதி அளிக்காததால் அங்கு இந்திய நாட்டின் செல்லாத நோட்டுக்கள் சுமார் ரூ. 100 கோடி அளவில் அங்கேயே உள்ளது.
வெளிநாடு வாழ் இந்தியர்களில் பலர் வெளிநாட்டு பாஸ்போர்ட் வைத்துள்ளார்கள். அவர்கள் அடிக்கடி இந்தியாவுக்கு வந்து போவதால் அவர்களிடமும் இந்த செல்லாத நோட்டுக்கள் பெருமளவில் உள்ளன. அவற்றை வெளிநாடுகளில் உள்ள இந்திய வங்கிகளில் திருப்பித் தர பலமுறை வேண்டுகோள் விடுத்தும் இந்த அரசு அதை கண்டுக் கொள்ளவில்லை.
இவர்கள் செல்லாத நோட்டுக்களாக எத்தனை பணம் வைத்துள்ளனர் என்பதற்கு சரியான கணக்கு இல்லை. சுமார் 18 லட்சம் பேர் இது போல உள்ளனர் என தெரிய வருகிறது. ஒவ்வொருவரிடமும் தலா ஒரு 500 ரூ. நோட்டு இருப்பதாக வைத்துக் கொண்டாலும் அதுவே ரூ.90 கோடி ஆகி விடுகிறது. அது தவிர வழக்கமாக வெளிநாட்டில் இருந்து வந்து போகும் இந்தியக் குடிமக்களில் சிலர் நவம்பரில் இருந்து இன்று வரை இந்தியா வராமல் உள்ளனர். அவர்களிடமும் செல்லாத நோட்டுக்கள் இருக்க வாய்ப்புள்ளது.
எனவே, ரிசர்வ் வங்கி நேப்பாளம், பூட்டான் ஆகிய நாடுகளில் உள்ள நோட்டுக்கள், வெளிநாட்டினரும், வெளிநாடு வாழ் இந்தியர்களும் வைத்திருக்கும் நோட்டுக்கள் போன்றவற்றை திரும்பப் பெற்றால், தற்போது சொல்லப்பட்டுள்ள ரூ. 16000 கோடி என்பது மிக குறைவாக ரூ. 3671 கோடியாக மாறி விடும். அந்த பணமும், பல ராணுவ வீரர்கள், முதியோர் போன்றவர்களால் நேரமின்மையால் மாற்ற முடியாமல் போனதாகவே இருக்கக்கூடும்.
இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளனர்.