ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் கார்ல் எரிக் ரின்ச் 2013ம் ஆண்டு வெளியான 47 ரோனின் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார்.

பின்னர், “ஆர்கானிக் இன்டெலிஜென்ட்” என்று அழைக்கப்படும் ஒரு செயற்கை, மனிதனைப் போன்ற இனத்தைப் பற்றிய ஒரு அறிவியல் புனைகதை தொலைக்காட்சி தொடரான ‘ஒயிட் ஹார்ஸ்’ கதையுடன் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்தை ரிஞ்ச் மற்றும் அவரது அப்போதைய மனைவி கேப்ரியலா ரோசஸ் பெண்டன்கோர் ஆகியோர் 2018ம் ஆண்டில் தொடர்பு கொண்டனர்.

ரிஞ்சின் புனைக்கதை பிடித்துப்போக $44 மில்லியன் பட்ஜெட்டில் இந்த தொடரை தயாரிக்க நெட்ஃபிக்ஸ் ஒப்புக்கொண்ட நிலையில் 2018 – 2019 இடையே பிரேசில், உருகுவே மற்றும் புடாபெஸ்டில் இந்த தொடரில் எபிசோடுகளை ரிஞ்ச் படமாக்கினார்.

இதனைத் தொடர்ந்து மேலும் $11 மில்லியன் செலவாகும் என்று இயக்குனர் ரிஞ்ச் தெரிவித்ததை அடுத்து தயாரிப்பு நிறுவனமான நெட்ஃபிக்ஸ் மற்றும் ரிஞ்ச் இடையே மோதல் ஏற்பட்டது.

இதனிடையே 2020ம் ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த வெப் சீரீஸ் தயாரிக்கும் திட்டம் கைவிடப்பட்டது.

இந்த நிலையில், தங்களிடம் வாங்கிய பணத்தில் கார்ல் எரிக் ரின்ச் கிரிப்டோகரன்சியில் ஊகங்கள் செய்யவும், சொகுசு விடுதிகள் மற்றும் அதிக கட்டணமுள்ள ரிஸார்டுகளில் தங்கவும், சொகுசு கார்களை வாங்கவும் செலவிட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து கார்ல் எரிக் ரின்ச் மீது பணமோசடி மற்றும் சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக நெட்ஃபிக்ஸ் நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக ரிஞ்ச் மீது கடந்த வாரம் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இது ஹாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.