சென்னை: திருவள்ளூா் மாவட்டம் குத்தம்பாக்கத்தில் ரூ.500 கோடி மதிப்பில் அதிநவீன திரைப்பட நகரம் அமையவுள்ளதாக செய்தித்துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தாா். முன்னதாக அதற்கான இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்தார்.
தமிழ்நாட்டில் ஏற்கனவே தமிழ்நாடு அரசு எம்ஜிஆா் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் உள்ளது. இங்கு சென்று அமைச்சர் சுவாமிநாதன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, எம்ஜிஆா் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன வளாகத்தில் தற்போது, செயல்பட்டு வரும் குளிா்சாதன படப்பிடிப்புத் தளத்தைப் போன்று மேலும் மூன்று புதிய அதிநவீன படப்பிடிப்புத் தளங்கள் அமைத்திட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான இடங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. விரைவில் பணிகள் தொடங்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும், தென்னிந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் அனைத்து வசதிகளுடன் கூடிய அதிநவீன திரைப்பட நகரம் ரூ.500 கோடியில் அமைக்கப்பட உள்ளதாக கூறியவர், இதுகுறித்த ஏற்கனவே முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி திருவள்ளுர் மாவட்டம் குத்தம்பாக்கம் பகுதியில், 152 ஏக்கரில் அதிநவீன திரைப்பட நகரம் அமைக்கப்பட உள்ளது. இதனால் புதிய இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளது. திரைப்பட நகரம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது என்றார்.
அமைச்சருடன், செய்தி மக்கள் தொடா்புத் துறை கூடுதல் இயக்குநா்கள் எஸ்.செல்வராஜ், மு.பா.அன்புச்சோழன், இணை இயக்குநா்கள் மு.மேகவா்ணம், கு.தமிழ்செல்வராஜன் உட்பட பலா் உடனிருந்தனா்.