கொரோனாவால் கேரளா மாநிலத்தில் 10 மாதங்கள் சினிமா தியேட்டர்கள் மூடிக்கிடந்தன.
தியேட்டரை திறக்க அரசு அனுமதி அளித்தும், தியேட்டர்கள் திறக்கப்படவில்லை.
தியேட்டர்கள் மூடிக்கிடந்த காலத்தில், கணக்கிடப்பட்ட மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி, அவர்கள் ‘பந்த்’ செய்தனர்.
அவர்கள் கோரிக்கையை ஏற்று, அரசாங்கம் இறங்கி வந்த பின்னரே தியேட்டர்களை திறந்தனர்.
இப்போது மோகன்லால் படத்தால் அங்கு மீண்டும் பிரச்சினை உருவெடுத்துள்ளது.
ஊரடங்கின் போது சில சினிமாக்கள், ஓ.டி,டி, தளமான இணையத்தில் வெளியானது.
அதனை தியேட்டர் அதிபர்கள் ஏற்றுக்கொண்டனர்.
ஆனால் தியேட்டர்கள் திறக்கப்பட்ட நிலையில், மோகன்லால் நடித்துள்ள ‘திரிஷ்யம் – 2’ இணையத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது, தியேட்டர் உரிமையாளர்களை கொந்தளிக்க செய்துள்ளது.
தியேட்டர் அதிபர்கள், விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள் ஆகியோரை உள்ளடக்கிய கேரள திரைப்பட வர்த்தக சபை (பிலில் சேம்பர்) நேற்று அதிரடி முடிவை எடுத்துள்ளது.
“ஓ.டி.டி.யில் முதலில் ரிலீஸ் ஆகும் சினிமாவை தியேட்டரில் ஒரு நாளும் வெளியிட மாட்டோம்” என்பதே அந்த முடிவு.
‘பிலிம் சேம்பர்’ முடிவால் ‘திரிஷ்யம்- 2’ தியேட்டரில் வெளியாகாது.
– பா. பாரதி