சென்னை :
திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் (கில்டு) சங்க தேர்தல் ஜூன் 10ம் தேதி நடைபெறும் என ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷா கூறியுள்ளார்.
தமிழக திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்க தேர்தல் கடந்த சில ஆண்டுகளாக தேர்தல் நடைபெறாத நிலையில், இது தொடர்பான வழக்கில், ஓய்வுபெற்ற நீதிபதியை நியமித்து, தேர்தல் நடத்த சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது.
அதைத்தொடர்ந்து கடந்த 7ம் தேதி நடைபெற்ற சங்க கூட்டத்தில் அப்போது தேர்தல் நடத்துவது பற்றி நீதிபதி பாஷா தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. கூட்டத்தின் முடிவில் வரும் ஜூன் 10ம் தேதி சென்னை அண்ணாநகர் கந்தசாமி கல்லூரியில் தங்களது சங்கத் தேர்தலை நடத்துவது என்றும், அன்று மாலையே வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிவுகளை வெளியிடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த, தேர்தல் ஆணையரும், சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான கே.என்.பாஷா. “தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் வரும் ஜூன் மாதம் 10ம் தேதி நடைபெறும் என்று கூறினார்.
இதற்கான வேட்புமனுத் தாக்கல் வரும் 21ம் தேதி தொடங்கி 25 வரை நடைபெறும். 28ம் தேதி மாலை 5 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். வாக்குப்பதிவின் போது வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்ற உறுப்பினர்கள் புகைப்ப்படத்துடன் கூடிய அடையாள அட்டையுடன் வந்தால் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்படுவர்” என்றும் கூறினார்.
இந்த சங்கத்தில் 1536 வாக்களிக்கும் தகுதியுள்ள வாக்காளர்கள் உள்ளனர். இந்தத் தேர்தல் தலைவர், துணைத்தலைவர், பொருளாளர், செயலாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பதவிகளுக்காக நடைபெற உள்ளது.