திருவனந்தபுரம்: நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் வயநாடு தொகுதியில், அவரை எதிர்த்து, இண்டியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள கம்யூனிஸ்டு கட்சி தலைவர் டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜா போட்டியிடுவார் என இந்திய கம்யூனிஸ்டு கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.
கேரள மாநிலத்தில், தற்போது ஆட்சி செய்துவரும் கம்யூனிஸ்டு கட்சிக்கு எதிரான மனைநிலையில்தான பாஜக, காங்கிரஸ் கட்சிகள் செயலாற்றி வருகின்றன. இந்த நிலையில், மக்களவை தேர்தலையொட்டி, அங்கு இடதுசாரி ஜனநாயக முன்னணி மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
கேரள மாநிலத்தில் மொத்தமுள்ள 20 தொகுதிகளில், திருவனந்தபுரம் உள்பட 15 தொகுதிகள் தற்போது காங்கிரஸ் கட்சியின் வசம் உள்ளன. அந்த தொகுதி களை தக்க வைத்துக்கொள்ளும் வகையில், காங்கிரஸ் கட்சி தற்போதே தேர்தல் பணிகளை முடக்கி விட்டுள்ளது. இதில் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மீண்டும் களமிறங்குவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம்பெற்றுள்ள இடதுசாரி ஜனநாயக முன்னணி, அதிக தொகுதிகளை கைப்பற்றும் நோக்கில் தேர்தல் பணிகளை முன்னெடுத்து வருகிறது. தனது கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அந்த கூட்டணியில் எந்தெந்த கட்சிக்கு எத்தனை இடங்கள் என்பது இறுதி செய்யப்பட்டுவிட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்னிற்ன.
இந்த நிலையில், கேரள மாநிலத்தில் தனது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் யார் என்ற விவரத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சி வெளியிட்டுள்ளது. அதில், ராகுல்காந்தி எம்.பி.யாக உள்ள வயநாடு தொகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் ஆனி ராஜா போட்டி யிடுகிறார். இவர் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜாவின் மனைவி .
மேலும், கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பன்னியன் ரவீந்திரன் திருவனந்தபுரம் தொகுதியிலும், முன்னாள் மந்திரி சுனில் குமார் திருச்சூரிலும், சி.ஏ.அருண்குமார் மாவேலிக்கரையிலும் போட்டியிடுகின்றனர்.
வயநாடு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆனி ராஜா, வயநாடு தொகுதியில் போட்டியிட கொடுத்திருப்பது ஒரு பெரிய வாய்ப்பு. அந்த வாய்ப்பை கட்சி என்னிடம் ஒப்படைத்துள்ளது. இந்த முறை மக்கள் ஆதரவை நாங்கள் வெல்வோம் என்று நாங்கள் நம்புகிறோம். நான் எப்போதும் ஆதரவுடன் இருப்பேன். நான் அரசியல் வாழ்வில் குழந்தை படிகளை கற்றுக்கொண்ட இடம் வயநாடு. எங்களது கட்சி இவ்வளவு காலமாக இடதுசாரி ஜனநாயக முன்னணி கூட்டணியின் கீழ் கேரளாவில் 4 தொகுதியில் போட்டியிட்டது. இந்த முறையும் 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கேரளாவை பொறுத்தவரை, இடதுசாரி ஜனநாயக முன்னணி மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு இடையே தான் போட்டி. அதில் புதிதாக எதுவும் இல்லை. அந்த நிலைமை அப்படியே உள்ளது. எதுவும் மாறவில்லை என்று தெரிவித்தார்.
மத்திய பாஜகவுக்கு எதிராக 26 கட்சிகளைகொண்ட இண்டியா கூட்டணியில் கம்யூனிஸ்டு கட்சிகளும் இடம்பெற்றுள்ள நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் ராகுல்காந்திக்கு எதிராக கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளரை அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராகுல் காந்தியின் மக்களவைத் தொகுதியான வயநாட்டில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் ஆனி ராஜா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.
இண்டியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் விவரம்:
அகில இந்திய காங்கிரஸ், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், தமிழக முதல்வர் ஸ்டாலின் திமுக, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சி, பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதாதளம், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரணின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி, மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, உத்தரபிரதேச எதிர்க்கட்சி தலைவரான அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி , முன்னாள் பிரதமர் சரண் சிங்கின் மகன் அஜய் சிங்கின் ராஷ்ட்ரிய லோக் தளம், அப்னா தளம் (காமிராவாடி), பாரூக் அப்துல்லாவின் ஜம்மு காஷ்மீரின் தேசிய மாநாடு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் விடுதலை கட்சி(மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்), புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, ஆல் இந்தியா பார்வர்ட் பிளாக், வைகோவின் மதிமுக, திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஈஸ்வரனின் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ஜவாஹூருல்லாவின் மனித நேய மக்கள் கட்சி, காதர் மொகீதினின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கேரளா காங்கிரஸ் (எம்), கேரளா காங்கிரஸ் (ஜோசப்) என மொத்தம் 26 கட்சிகள் இந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ளன