மும்பை: பாஜக, சிவசேனா சண்டை குழந்தைத்தனமானது என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறியிருக்கிறார்.

மகாராஷ்டிரா  சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளிவந்தும், பாஜக கூட்டணி அரியணை ஏறவில்லை. தேர்தலில், பாஜக 105 இடங்களும், சிவசேனா 56 இடங்களையும் வென்றன.

ஆட்சியமைக்க இந்த கூட்டணிக்கு பெரும்பான்மை இருக்கிறது. ஆனால், சுழற்றி முறையில் முதலமைச்சர் பதவி, அமைச்சரவையில் சம பங்கு என கோரிக்கைகளை முன்வைத்து சிவசேனா, பாஜகவுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது.

அதனால் 2 வாரங்களை எட்டியும் புதிய அரசு அமையவில்லை. அதே நேரத்தில், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்க சிவசேனா முயல்வதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

அதற்கு காரணம், சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத், சரத்பவாரை சந்தித்து பேசி இருக்கிறார். ஆனால், இது எந்தளவுக்கு சாத்தியமாகும் என்பது தெரியவில்லை.

இந் நிலையில், மும்பையில் சரத்பவார் கூறியிருப்பதாவது: முதலமைச்சர் பதவிக்காக, பாஜகவும், சிவசேனாவும் போடும் சண்டை குழந்தைத்தனமானது. சிவசேனாவுடன் கூட்டணி அமைத்து, ஆட்சியமைப்பது பற்றி எங்கள் கட்சியில் பேசவே இல்லை.

எங்கள் கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லை. மக்கள் எங்களை எதிர்க்கட்சி வரிசையிலே அமருமாறு தீர்ப்பு அளித்துள்ளனர். அதை தான் நாங்கள் சிறப்பாக செய்வோம்.

அவர்களுக்கு(பாஜக, சிவசேனா) ஆட்சியமைக்க மக்கள் வாய்ப்பு தந்துள்ளனர். அதை அவர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால், நடப்பது குழந்தைத் தனமானதாக இருக்கிறது என்றார்.

[youtube-feed feed=1]