இன்று மே 31, பொது முடக்கம் 4.0 முடிவடைகிறது. நோய் பாதிப்புகளின் அடிப்படையில் கட்டுப்பாடுகளை தளர்த்தவும் உள்ளனர். ஆனால், அரசு பல விதிகளை அறிவித்தாலும், நடைமுறையில் எவ்வித விதிகளையும் மக்கள் பின்பற்றாமல் உள்ள இந்த நிலையில் கட்டுபாடுகளை தளர்த்தினால், ஜூன் முதல் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். சமூகவழி பரவல் மேலும் தீவிரமடையும்.
பெங்களூரு: “பொது முடக்கம் 4.0 முடிந்ததும் கோவிட் -19 பாதிப்பு கடுமையாக அதிகரிக்கும்” என்று COVID-19 பணிக்குழு அதிகாரியும், கர்நாடக சுகாதார பணிக்குழுவில் உள்ள தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவன (நிம்ஹான்ஸ்)த்தின் நரம்பியல் வைராலாஜி துறை தலைவருமான, டாக்டர் வி. ரவி எச்சரித்தார். ” நாம் நாடு இன்னும் கோவிட் பாதித்தவர்களின் முழுமையான எண்ணிக்கையை இன்னும் காணவில்லை. மே 31 அன்று லாக் டவுன் 4.0 முடிவடைந்த பின்னர், ஜூன் முதல் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும். அது சமூக வழி பரவலாக இருக்கும்”
டிசம்பர் இறுதிக்குள், இந்தியாவின் மக்கள் தொகையில் பாதி பேர் வைரஸால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஆனால் இதில் குறிப்பிடத்தக்கச் செய்தி என்னவாக இருக்கும் எனில், அவர்களில் 90 சதவீதம் பேர் தங்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது என்பது கூட தெரியாது,” என்றும் அவர் கூறினார். ” இதில், 5-10 சதவிகிதம் பேர் அதிக ஓட்டம் கொண்ட ஆக்ஸிஜன் கூடிய சிகிச்சையும், மேலும் 5 சதவிகிதம் பேருக்கு வென்டிலேட்டர் சிகிச்சையும் தேவைப்படும் அளவுக்கு பாதிப்பு ஏற்படும்” என்று அவர் கூறினார்.
“இன்றுடன் லாக் டவுன் 4.0 முடிவடைவதால், பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையாக சிகிச்சையளிக்க மாநிலங்களுக்கு மருத்துவ உள்கட்டமைப்பை முழுமையாக வழங்க வேண்டியது அவசியம்” என்றும் டாக்டர் ரவி கூறினார், குறிப்பாக தீவிர மருத்துவ பராமரிப்பு மற்றும் சிகிச்சை வசதிகள் அதிக அளவில் தேவைப்படும். இந்த நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பைக் கையாளும் வகையில் மாநிலங்களைத் தயாராக்க, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்), பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ், ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது இரண்டு கோவிட் -19 சோதனை ஆய்வகங்களை வைத்திருக்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.
கர்நாடக புதன்கிழமை 60 ஆய்வகங்களின் இலக்கை எட்டிய முதல் மாநிலமாக ஆனது. “இன்று, பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா மருத்துவ அறிவியல் கழகத்தில் (கிம்ஸ்) ஒரு கோவிட் -19 சோதனை ஆய்வகத்திற்கு நாங்கள் ஒப்புதல் அளித்துள்ளோம், அதனுடன் இப்போது 60 ஆய்வகங்கள் உள்ளன, அவை மாநிலத்தின் 30 மாவட்டங்களுக்கு வழிகாட்டியாக இருக்கும்,” என்று அவர் கூறினார். .
15 சோதனை ஆய்வகங்கள் மட்டுமே இருந்தபோது, ஏப்ரல் 15 ஆம் தேதி, மாநிலத்தில் 60 ஆய்வகங்களை அமைக்கும் பணி அவருக்கு வழங்கப்பட்டது என்று அவர் கூறினார். “மாநில அரசு எங்களுக்கு வழங்கிய அனைத்து ஆதரவிற்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். எங்கள் சோதனை திறனை அதிகரிக்க ஜூன் 15-க்குள் கர்நாடகாவில் 75 சோதனை ஆய்வகங்களை அமைப்பதே எனது கனவு ”என்று டாக்டர் ரவி கூறினார்.
நாட்டில் இறப்பு விகிதம் குறித்து பேசிய டாக்டர் ரவி, இது இப்போது 3 முதல் 4 சதவீதம் வரை உள்ளது. குஜராத் மாநிலம் அதிகபட்ச இறப்பு விகிதமாக, 6 சதவீதத்தைப் பதிவு செய்துள்ளது. “நாங்கள் தடுப்பு மருந்துக்காக, அடுத்த ஆண்டு மார்ச் வரை காத்திருக்க வேண்டியிருக்கும். தேவையான அனைத்து முன்னெச்சரிக்கைகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுடன் மக்கள் COVID-19 உடன் வாழக் கற்றுக்கொள்வார்கள். கொரோனாவானது, எபோலா, மெர்ஸ் மற்றும் SARS போன்ற வைரஸ்களைப் போல ஆபத்தானது அல்ல, ” என்று அவர் கூறி முடித்தார்.
பொது முடக்கம் தளர்த்தப்பட்டாலும், மக்கள் விழிப்புடனும், பொறுப்புடனும் இருந்து, சமூக இடைவெளியை பின்பற்றினால், COVID-ஐ நாம் எளிதில் வெல்ல முடியும்.
ஆங்கிலம்: பாலா சவுஹான்
தமிழில்: லயா