மயாமி: அமெரிக்காவில் ஓரினச்சேர்க்கையாளர்கள் கிளப்புக்குள் புகுந்து 50 பேரை சுட்டுக் கொன்ற நபர்,  மன நோயாளியா, மதவெறியனா என்ற சரச்சை எழுந்துள்ளது.
அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் ஆர்லான்டோ நகரில் பல்ஸ் என்ற ஓரினச்சேர்க்கையாளர் கிளப்பில்   துப்பாக்கியால் சுட்டு   50 பேரைக் கொன்றான் உமர் மாட்டீன் என்பவன். இவனை காவல்துறையினர் சுட்டுக்கொன்றனர். இவன்  மத வெறியனா, மனநோயாளியா என்ற சர்ச்சை தற்போது எழுந்துள்ளது.
புளோரிடா மாகாணத்தில் உள்ள போர்ட் செயின்ட் லூசி பகுதியில்  வசித்து வந்த உமர் மாட்டீன், ஜி4எஸ் நிறுவனத்தில் செக்யூரிட்டி கார்டாக பணியாற்றி வந்தான்.
ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஆதரித்து அவன் பேசி வந்ததாக முதல்கட்ட தகவல்கள்  தெரிவித்தன. மேலும் “ஓரினச்சேர்க்கை என்பது இறைவனுக்கு விரோதமானது” என்று அவன் பேசி வந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

சித்திக் - உமர்
சித்திக் – உமர்

உமர் தன்னுடன் பணியாற்றிய டேனியல் கில்ராய் என்பவரிடம்  பொது மக்களை கொலை செய்வது குறித்து அடிக்கடி பேசி வந்திருக்கிறான். இதனால், கில்ராய் இது பற்றி நிறுவனத்திடம் தெரிவிக்க  உமர் ஆத்திரமாகியிருக்கிறான்.
டேனியலுக்கு தினமும் 30 எஸ்.எம்.எஸ். அனுப்பியுள்ளான். உமரின் தொந்திரவு பொறுக்காமல், டேனியல் தனது வேலையை விட்டுச் செய்துவிட்டார்.
காவல்துறையினரின் விசாரணையில்,  சில வாரங்களுக்கு முன்பு தான் உமர் இரண்டு துப்பாக்கிகளை வாங்கியது தெரியவந்திருக்கிறது.
உமர் வழக்கமாக தொழுகை நடத்தும் பள்ளிவாசல் இமாம், “உமர் எப்போதும்  பள்ளிவாசலுக்கு கடைசி ஆளாக தொழுக வந்து,  முதல் ஆளாக கிளம்பிவிடுவான். பள்ளிவாசலில் உமர் யாருடனும் பேசியது இல்லை” என்று கூறியுள்ளார்.
சித்தோரா
சித்தோரா

உமர்  முன்னாள் மனைவி சித்தோரா,  “உமர் எதற்கெடுத்தாலும் என்னை அடித்து உதைப்பான். துன்புறுத்துவான். அவன் ஒரு  மனநோயாளி போலவே நடந்துகொண்டான்” என்று தெரிவித்துள்ளார்.
உமரின் தந்தை சித்திக் மதீன், ஆப்கானிஸ்தானில் பிறந்து அமெரிக்காவில் செட்டில் ஆனவர்.  இவர், அமெரிக்காவில் இருந்தபடியே தாலிபான் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர் என்றும் தெரியவந்துள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மயாமியில் தனது மூன்று வயது மகனுடன்  சென்று கொண்டிருக்கையில் இரண்டு ஆண்கள் முத்தமிட்டதை பார்த்தது உமருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அவன் இதுபோல செயல்படுவான் என்று நாங்கள் நினைக்கவில்லை. மற்ற எல்லோரையும்போல நாங்களும் உமரின் செயலால் அதிர்ச்சி அடைந்திருக்கிறோம். உமரின் செயலுக்கும் மதத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை” என்று சித்திக் தெரிவித்தார்.
தற்போது, “உமர் மதவெறியனா, மனநோயாளியா” என்ற விவாதம் அமெரிக்காவில் எழுந்துள்ளது.