கத்தார்: உலகம் முழுவதும் கோடிக்கணக்கான கால்பந்து ரசிகர்கள் திக்திக் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருந்த நிலையில், அர்ஜெடினா உலக கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. 36ஆண்டுகளுக்கு பின் மீண்டும் உலக கோப்பையை அர்ஜென்டினா பெற்றுள்ளது. இது வரலாற்று நிகழ்வாக கருதப்படுகிறது. இதையடுத்து மெஸ்ஸி கால்பந்து போட்டியில் இருந்து விலகும் முடிவை கைவிட்டார்.
க்கிய அரசு நாடான கத்தாரில் நடைபெற்ற வந்த பிபா உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நேற்று இரவு பரபரப்பாக நடைபெற்றது. அரங்கே அதிரும் வகையில் மக்கள் கூடியிருந்ததுடன், உலகம் முழுவதும் பல கோடி ரசிகர்கள் நேரலையில் பார்த்துக்கொண்டிருந்த இறுதிப்போட்டி மிகவும் பரபரப்பாக நடைபெற்றது. இந்த போட்டியுடன் பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸி ஒய்வுபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்ததால், போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இறுதி ஆட்டத்தி,ன முதல் பகுதியில் இரண்டு கோல் போட்டு பரபரப்பை ஏற்படுத்திய அர்ஜென்டினா, சற்று மெத்தனமாக ஆடியதால், அடுத்த பகுதியில், பிரான்ஸ் எளிதான இரண்டு கோல் அர்ஜென்டினாவுக்கு அதிர்ச்சியை கொடுத்தது மட்டுமின்றி உலக கால்பந்து ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி உலக கோப்பையை இந்த ஆண்டு கைப்பற்றப்போவது யார் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இரு அணிகளும் சமமான கோல் பெற்றிந்த நிலையில், கொடுக்கப்பட்ட கூடுதல் நேரத்தில் இரு அணிகளும் கடுமையாக போராடி தலா ஒரு கோல் போட்டது. இதனால் ஆட்டம் மேலும் சூடுபிடித்தது.
இதையடுத்து, இறுதியில், பெனால்டி ஷூட் வாய்ப்பு அளிக்கப்பட்டது. இந்த ஷூட் அவுட் வாய்ப்பில் அர்ஜென்டினா 4-2 (3-3) என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி, மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
அர்ஜென்டினா அணியை விட பிரான்ஸ் அணி வலிமையாக பார்க்கப்பட்ட நிலையில், மாறாக இப்போட்டியின் தொடக்கத்தில் இருந்தே அர்ஜென்டினா அணிதான் ஆக்ரோஷமாக விளையாடியது. அப்போது 23ஆவது நிமிடத்தில், அர்ஜென்டினா வீரர் டி மரியாவை, பிரான்ஸ் வீரர் டேம்பேலே பாக்ஸின் உள்ளே தள்ளிவிட்டதால் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அந்த பெனால்டியை மெஸ்ஸி கோலாக மாற்றி அர்ஜென்டினாவை முன்னிலை பெற வைத்தார். இந்த தொடரில், மெஸ்ஸியின் ஆறாவது கோல் இதுவாகும். தொடர்ந்து, அதே ஆதிக்கத்தை தொடர்ந்து அர்ஜென்டினா 36ஆவது நிமிடத்தில் இரண்டாவது கோலை அடித்தது.
மெஸ்ஸி ஆடுகளத்தின் நடுப்பகுதியில் இருந்து கொடுத்த பாஸை, மாக் அலிஸ்டர் அற்புதமாக அசிஸ்ட் செய்ய அதை டி மரியா கோலாக மாற்றி அசத்தினார். இதையடுத்து, 2-0 என்ற முன்னிலையுடன் அர்ஜென்டினா முதல் பாதியை நிறைவுசெய்தது. முதற்பாதி முழுவதும் அர்ஜென்டினா மட்டுமே ஆதிக்கம் செலுத்தியது.
உதாரணமாக, முதற்பாதியில் 60 சதவீதம் பந்தை தன்வசம் வைத்திருந்த அர்ஜென்டினா கோலை நோக்கி 6 முறையும், கோல் முயற்சியாக 3 முறையும் தாக்குதல் தொடுத்திருந்தது. மாறாக, 40 சதவீதம் பந்தை கடத்திய பிரான்ஸ் அணியின் ஷாட்ஸ் மற்றும் ஷாட்ஸ் ஆன் டாக்கெட் பூஜ்ஜியமாகவே இருந்தது. இதையடுத்து, இரண்டாம் பாதியிலும் இதே ஆதிக்கத்தை அர்ஜென்டினா தொடர, பலம் வாய்ந்த பிரான்ஸ் தொடர்ந்து தடுமாறியது. இந்த நிலை 80ஆவது நிமிடம் வரை நீடித்தது. அப்போது, 80ஆவது நிமிடத்தில், அர்ஜென்டினாவின் ஓட்டாமெண்டி செய்த தவறால், பிரான்ஸ் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைக்க, அதை கோலாக மாற்றினார் நட்சத்திர வீரர் இம்பாப்பே.
துவண்டு போயிருந்த பிரான்ஸ் அணியினருக்கு பெரும் ஊக்கத்தை இது அளித்தது. தொடர்ந்து, பெனால்டி அடித்த அடுத்த நிமிடமே அதாவது 81ஆவது நிமிடத்தில் இம்பாப்பே அசத்தலாக அடுத்த கோலை அடித்து, போட்டியை சமன் செய்தார். வெற்றி கொண்டாட்டத்திற்காக காத்திருந்த அர்ஜென்டினா அணிக்கு இது பேரிடியாக விழுந்தது. 90 நிமிடங்கள் முடிந்த பின் தொடர்ந்து, 8 நிமிடம் இஞ்சூரி டைம் கொடுக்கப்பட்டது. அதிலும் இரு அணிகளும் கோல் அடிக்காததால் போட்டி கூடுதல் நேரத்திற்கு சென்றது.
இதையடுத்து, அரைமணி நேரம் கூடுதல் கொடுக்கப்பட்டது. அதன் முதல் 15 நிமிடத்திலும் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. பிற்பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க அடுத்தடுத்து முயன்ற நிலையில், 108ஆவது நிமிடத்தில் மெஸ்ஸி அசத்தலாக கோல் அடிக்க வெற்றிக்கனி அர்ஜென்டினா பக்கம் சென்றது. தொடர்ந்து, 117ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை இம்பாப்பே கோலாக மாற்றி ஆட்டத்தை 3-3 என்ற கணக்கில் சமன் செய்தார். ஆட்டம் பெனால்டி கிக்கை நோக்கி நகர்ந்தது.
பெனால்டி ஷூட்அவுட்டில், பிரான்ஸ் தனது முதல் வாய்ப்பை பெற்றது. அதன்படி, பிரான்ஸ் அணியில் இம்பாப்பேவும், அர்ஜென்டினாவில் பிரான்ஸ் அணியும் முதல் கோலை அடித்தனர். அடுத்து, பிரான்ஸ் தரப்பில் வந்த கான்மேன் அடித்த கிக்கை அர்ஜென்டினா கோல் கீப்பர் மார்டினஸ் லாவகமாக தடுத்தார். ஆனால், அர்ஜென்டினா இரண்டாவது வாய்ப்பில் கோல் அடித்து முன்னிலை பெற்றது.
மூன்றாவது வாய்ப்பையும் பிரான்ஸ் தவறவிட அர்ஜென்டினா மூன்றாவதிலும் கோல் அடித்து தொடர்ந்து முன்னிலை பெற்றது. நான்காவது கோலை பிரான்ஸ் அடித்திருந்தாலும், அடுத்து அர்ஜென்டினாவும் நான்காவது வாய்ப்பில் கோல் அடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது. அதன்மூலம், பெனால்டியில் 4-2 (3-3) என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக அர்ஜென்டினா கோப்பை கைப்பற்றியது. மெஸ்ஸி தனது முதல் உலகக்கோப்பை கைகளில் தழுவினார். 1978, 1986 உலகக்கோப்பை தொடரில் அர்ஜென்டினா கோப்பையை வென்றிருந்தது.
உலகக்கோப்பை கால்பந்து இறுதி போட்டியில் வென்ற அர்ஜென்டினா அணிக்கு ரூ.342 கோடி பரிசு வழங்கப்பட உள்ளது. 36 ஆண்டுகளுக்கு பின் அர்ஜென்டினா கோப்பை வென்றுள்ளது. அர்ஜென்டினாவுக்கு தனது தலைமையிலான அணி பெற்ற முதல் உலகக்கோப்பையை மெஸ்ஸி முத்தமிட்டார். மெஸ்ஸிக்கு தங்க கால்பந்து வழங்கப்படுகிறது.
96 ஆண்டுகால உலகக்கோப்பை வரலாற்றில் அதிகம் கோல் அடிக்கப்பட்ட இறுதிப்போட்டி இதுதான். 2002ஆம் ஆண்டு பிரேசில் வென்ற பிறகு, 20 ஆண்டுகள் கழித்து தென் அமெரிக்க அணி உலகக்கோப்பை வென்றிருக்கிறது. 1966ஆம் ஆண்டுக்கு பிறகு, இறுதிப்போட்டியில் ஹாட்ரிக் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை இம்பாப்பே பெற்றுள்ளார்.
தொடரில் அதிக கோல்கள் அடித்த இம்பாப்பே கோல்டன் பூட் விருதை வென்றார். மெஸ்ஸிக்கு கோல்டன் பால் விருது வழங்கப்பட்டது. அர்ஜென்டினா கோல் கீப்பர் மார்ட்டீனஸ் கோல்டன் கிளவ் விருதை பெற்றார். சிறந்த இளம் வீரர் விருதை என்ஸோ ஃபெர்னான்டஸ் வென்றார்.