உலக கோப்பை கால்பந்து போட்டி வரலாற்றில் முதல் முறையாக பெண் நடுவர் களமிறங்குகிறார்.

ஆண்களுக்கான இந்த ஃபிஃபா உலக கோப்பை போட்டியில் ஜெர்மனி – கோஸ்டா ரிக்கா அணிகளுக்கு இடையே நாளை நடைபெற இருக்கும் குரூப் E பிரிவின் கடைசி ஆட்டத்தில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஸ்டெபானி ப்ராப்பர்ட் ரெபிரீ-யாக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இவருடன் நியூசா பாக் மற்றும் கரேன் டியாஸ் ஆகிய இருவர் துணை நடுவர்களாக செயல்படுவார்கள்.

முதல்முறையாக அனைத்து பெண் நடுவர்களை கொண்ட இந்தப் போட்டி ரசிகர்களிடையே சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த போட்டியில் வெற்றிபெற்றால் மட்டுமே நாக்-அவுட் சுற்றுக்கு ஜெர்மனி அணி தகுதி பெற வாய்ப்பு ஏற்படும் அதேவேளையில் கோஸ்டா ரிக்கா அணி இந்தப் போட்டியை சமன் செய்தாலே அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளது என்பதால் இருநாட்டு ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் இந்த போட்டியை எதிர்பார்த்துள்ளனர்.

38 வயதான ஸ்டெபானி ப்ராப்பர்ட் ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் கால்பந்து போட்டிகளில் நடுவராக செயல்பட்டு புகழ்பெற்றவர்.

2019 ம் ஆண்டு பிரான்ஸ் லீக் போட்டியில் முதல் முறையாக நடுவராக களமிறங்கிய இவர் அதே ஆண்டு நடைபெற்ற பெண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் நடுவராக இருந்தார்.