காய்ச்சல், சளி இருமல் மருந்து விற்பனை கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தாண்டு ஏப்ரல் – மே மாதங்களில் அதிகளவு விற்பனையாகி உள்ளது.

பாரசிட்டமால் மற்றும் அஸீத்ரோமைசின் ஆகிய மருந்து விற்பனை குறித்து ஆய்வு நடத்திய சி.என்.பி.சி. செய்தி நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

கடந்த 2019 ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரையிலான வழக்கமாக காய்ச்சல் ஏற்படும் மழை மற்றும் பனி காலமான இந்த ஆறு மாதத்தில் சராசரியாக மாதம் ஒன்றுக்கு ரூ. 117.6 கோடி வரை விற்பனையான பாரசிட்டமால் மருந்து, 2020 ம் ஆண்டு சராசரியாக 93 கோடி ரூபாய்க்கு விற்பனையானது.

2021 ம் ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரையிலான ஆறு மாத காலத்தில் சராசரியாக 134 கோடி ரூபாய்க்கு விற்பனையானது மட்டுமல்லாமல், ஏப்ரல் மற்றும் மே ஆகிய இரண்டு மாதங்களில் மட்டும் 383 கோடி ரூபாய் அளவுக்கு விற்பனையாகி உள்ளது.

அதேபோல், அஸீத்ரோமைசின் கடந்த 2019 ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரையிலான ஆறு மாதத்தில் சராசரியாக மாதம் ஒன்றுக்கு ரூ. 67 கோடி வரை விற்பனையான நிலையில், 2020 ம் ஆண்டு சராசரியாக 68 கோடி ரூபாய்க்கு விற்பனையானது.

2021 ம் ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரையிலான ஆறு மாத காலத்தில் சராசரியாக 87.6 கோடி ரூபாய்க்கு விற்பனையானது மட்டுமல்லாமல், ஏப்ரல் மற்றும் மே ஆகிய இரண்டு மாதங்களில் மட்டும் 291.3 கோடி ரூபாய் அளவுக்கு விற்பனையாகி உள்ளது.

இவ்விரண்டு மருந்துகளும் இந்த ஆண்டு கொரோனா இரண்டாவது அலையின் போது ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் அதிகளவு விற்பனையாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.