சென்னை: தமிழ்நாட்டில் வரும் 10-ந்தேதி காய்ச்சல் முகாம் நடைபெறும் என்றும், தமிழகத்தில் காய்ச்சலால் இதுவரை எந்தவொரு உயிரிழப்பும் இல்லை என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்தியா முழுவதும் காய்ச்சல் பரவி வருவதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. முக கவசம் தனி மனித இடைவெளியை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் . சென்னை உள்பட பல இடங்களில் கொசு உற்பத்தியை தடுக்க கவனமுடன் செய்லபட்டு வருகிறோம் என்றவர், தற்போதுவரை தமிழ்நாட்டில், காய்ச்சலால் உயிரிழப்பு ஏதும் இல்லை என்றார்.
மேலும், தமிழகத்தில் வரும் 10-ம் தேதி 1000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடைபெற உள்ளது என்றும் தெரிவித்தார். இன்ப்ளூயன்சா-ஏ வகை வைரஸ் தொற்றை தடுக்கும் நோக்கில் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருவதாக தெரிவித்தவர், 10-ந்தேதி நடைபெற உள்ள காய்ச்சல் முகாம்களில் 5ஆயிரத்துக்கு மேற்பட்ட மருத்துவ பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஒவ்வொரு முகாமிலும் மருத்துவர், செவிலியர், ஆய்வக நுட்பனர், உதவியாளர்கள் இடம்பெற உள்ளனர். இது தொடர்பாக மாவட்ட துணை சுகாதார இயக்குனர்களுக்கு பொது சுகாதார துறை இயக்குனர் சில முக்கிய அறிவுறுத்தல்களை விடுத்துள்ளார் என்றும் கூறினார்.
வரும் 10-ந் தேதி தமிழகத்தின் 1000 இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடை பெற உள்ளது. அதற்காக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், ஆய்வக நுட்பனர்கள், உதவியாளர்கள் பணியில் அமர்த்தப்பட உள்ளதாகவும், மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.