தேசிய சுகாதாரம் மற்றும் குடும்பம் குறித்த கணக்கெடுப்பில் இந்திய அளவில் பெண்கள் கருவுறும் விகிதம் குறைந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

2015 – 16 ல் நடத்திய கணக்கெடுப்பில் 2.2 என்றிருந்த விகிதம் இப்போது சராசரியாக ஒரு பெண் 2.0 முறை குருவுருவதாக கணக்கிடப்பட்டுள்ளது, இதனால் இந்திய மக்கள் தொகை ஒரு நிலையான வளர்ச்சியை பெற்றிருப்பதாகத் தெரிகிறது.

மத்திய பிரதேஷ், ராஜஸ்தான், ஜார்கண்ட், உத்தர பிரதேஷ், பீகார், மணிப்பூர் மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களில் மட்டும் பெண்கள் கருவுறும் விகிதம் 2.1 ஆக உள்ளது.

கொரோனா பரவல் காரணமாக 2019 முதல் 2021 வரை இரு கட்டங்களாக நடத்தப்பட்ட ஆய்வில் இரண்டாவது கட்டமாக நடத்தப்பட்ட 14 மாநில புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ள தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு முகமை இந்த தகவலைத் தெரிவித்துள்ளது.

பஞ்சாப் நீங்கலாக மற்ற மாநிலங்களில் கருத்தடை சாதனங்களை பயன்படுத்துவதும் விகிதம் 54 சதவீதத்தில் இருந்து 67 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. பல மாநிலங்களில் நவீன கருத்தடை முறைகளும் வளர்ச்சி அடைந்திருக்கிறது.

குடும்பக் கட்டுப்பாடு வேண்டாம் என்று தவிர்ப்பவர்களின் விகிதமும் 13 சதவீதத்தில் இருந்து 9 சதவீதமாக குறைந்திருப்பதாக அந்த கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2015 – 16 ம் ஆண்டு 1000 ஆண்களுக்கு 991 என்று இருந்த பெண்கள் பிறப்பு விகிதம் இப்போது 1000 ஆண்களுக்கு 1020 என்று அதிகரித்திருக்கிறது.

அதேபோல், 18 வயதுக்கு முன் திருமணம் செய்துகொள்வதும், 15 – முதல் 19 வயதில் உள்ள பெண்கள் குழந்தை பெரும் விகிதமும் வெகுவாக குறைந்திருப்பதாக அந்த புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.