டில்லி:

டில்லியில் உள்ள பிரபலமான  பெரோஷ் ஷா கோட்லா கிரிக்கெட் மைதானத்தின் பெயரை அருண்ஜெட்லி கிரிக்கெட் மைதானம் என பெயர் மாற்ற டில்லி கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது.. இதற்கான விழா அடுத்த மாதம் 12ந்தேதி நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த வாரம் மறைந்த முன்னாள்  மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் பெயரை டில்லி பெரோஷ் ஷா கோட்லா கிரிக்கெட் மைதானத்திற்கு சூட்ட டில்லி கிரிக்கெட் சங்கம் முடிவெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மறைந்த அருண்ஜெட்லி  டில்லி கிரிக்கெட் சங்க தலைவராக நீண்ட காலம் இருந்ததால், அவரை கவுரவிக்கும் வகையில், அவரது பெயரை சூட்ட முடிவு செய்துள்ளதாக டில்லி கிரிக்கெட் சங்கத்தினர் தெரிவித்து உள்ளார்.

நாட்டின் மிகப்பழமையான ஸ்டேடியங்களில் டில்லி பெரோஷ் ஷா கோட்லா  கிரிக்கெட் மைதானமும் ஒன்று. இது 1883-ம் ஆண்டு கட்டப்பட்டதாகும். இந்த மைதானத்தில்  சுமார் 50 ஆயிரம் பேர் வரை  கிரிக்கெட்டை காண முடியும். தற்போது இந்த ஸ்டேடியத்துக்கு அருண் ஜெட்லி பெயர் சூட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளது.

ஏற்கனவே  டில்லி கிரிக்கெட் மைதானத்தின் ஒரு ஸ்டாண்டுக்கு தற்போதைய கிரிக்கெட் அணியின் கேப்டன்  கேப்டன் விராட் கோலியின் பெயரை  டில்லி கிரிக்கெட் சங்கம் சூட்டியிருந்தது  குறிப்பிடத்தக்கது.