சென்னை,

பெரா வழக்கில், காணொளி காட்சி மூலம் கர்நாடக சிறையில் இருக்கும் சசிகலா ஆஜரானார். அவர்மீது இன்று 4வது வழக்கில் குற்றப்பத்திரிகை பதிவு செய்யப்பட்டது.

ஏற்கனவே 3 வழக்குகளில் அவர்மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று 4வது வழக்கிலும் அவர்மீது குற்றச்சாட்டு பதவு செய்யப்பட்டது.

கடந்த 1996-97ம் ஆண்டின்போது, ஜெஜெ டிவிக்கு வெளிநாடுகளில் இருந்து ஒளிபரப்பு சாதனங்கள் இறக்குமதி செய்தது  தொடர்பாக அந்நியச் செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக சசிகலா, அவரது அக்கா மகன் பாஸ்கரன், ஜெஜெ டிவி மீது 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த வழக்குகள் அனைத்தும் கடந்த 20 ஆண்டுகளாக முடக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில், ஜெயலலிதா மறைவை தொடர்ந்து வழக்கு மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.

மத்திய அரசின் அமலாக்கத்துறை நடவடிக்கையைதொடர்ந்து, இந்த வழக்குகள் அனைத்தும் எழும்பூர்  பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே இந்த வழக்குகளில்  குற்றச்சாட்டு பதிவு செய்வதற்காக பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் சசிகலா ஆஜரானார். அப்போது சசிகலா மற்றும் பாஸ்கரன் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

இந்நிலையில் இன்று இரண்டாவது முறையாக அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீண்டும் காணொலி காட்சி மூலம் ஆஜரானார்.

அப்போது அவரிடம் எஞ்சிய கேள்விகள் கேட்கப்பட்டது அதன் அடிப்படையில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதே போன்று பாஸ்கரன் மீதும் விசாரணையின் போது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.