வங்கக்கடலில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம் இன்று மாலை புயலாக உருவெடுக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும் எனவும், டெல்டா மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஃபெங்கல் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் நவம்பர் 30ம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு நிலை / புயல் நவம்பர் 30 ஆம் தேதி வாக்கில் பரங்கிப்பேட்டை, கடலூர் மற்றும் சென்னை இடையே கரையை கடக்கக்கூடும் என்று சுயாதீன வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது :
சென்னை மாவட்டத்தில் நவம்பர் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும். சென்னைக்கு தெற்கே கடப்பதால், சென்னையின் குடிநீர் தேவைக்கு தேவையான மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில், 27-ம் தேதி (இன்று) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும், நாளை 28-ம் தேதி மிதமான மழை பெய்யும், 29ம் தேதி கனமழை பெய்யும் என்றும் 30-ம் தேதி சென்னையில் மிக கனமழை முதல் அதி கனமழை பெய்யும் என்றும் கணித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து ஓரிரு நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்துள்ள அவர் புயல் காரணமாக ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் கொங்கு மண்டலம் போன்ற உள்பகுதிகளிலும் மழைபெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளார்.