மலாவி தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள குட்டி நாடாகும். இங்கு பெண் குழந்தைகளுக்கு எதிராக வன்கொடுமைகள் சடங்குகள் என்ற பெயரில் மிகுதியாக அரங்கேறி வருகின்றன. இந்த அநியாயங்களை எதிர்த்து டெட்சா என்ற மாகாணத்தில் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தெரேசா கச்சிந்தமோட்டோ என்ற பெண்மணி தீரத்துடன் போராடிவருகிறார்.

malawi

இங்கு வாழும் குடும்பங்களில் பருவவயதை அடைந்து பூப்பெய்தும் சிறுமிகளை ‘பரிசுத்தப்படுத்துதல்(!)’ என்ற பெயரில் தங்களது இனத்தை சேர்ந்த ’ஹையெனா’ என்னும் சாமியார்களுடன் முதன்முதலாக உடலுறவில் ஈடுபடுத்துவதை இங்குள்ள மக்கள் அனைவரும் ஒரு புனிதமான சம்பிரதாய சடங்காகவே கருதி வருகின்றனர். இங்கு 12 வயதானவுடன் பெண் குழந்தைகளுக்கு திருமணம் நடத்திவைக்கப்பட்டுவிடும். 2012இல் ஐ.நா கணக்கெடுப்புப்படி பாதிக்கும் அதிகமான பெண்குழந்தைகளுக்கு 12 வயதிலேயே திருமணம் முடிந்துவிடுவதாக தெரிகிறது.
தெரேசா தலைவியானவுடன் கிட்டத்தட்ட 850 குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்தி அந்த சிறுமிகளை பள்ளிக்கு அனுப்பியிருக்கிறார். அதோடு மட்டுமன்றி அவர்களது கல்விச் செலவையும் தானே ஏற்றிருக்கிறார்.
மேலும் பரிசுத்தப்படுத்துதல் என்ற பெயரில் நடைபெறும் கேவலமான சடங்கையும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கியிருக்கிறார். மலாவியில் பெண்களின் திருமண வயது 18 என்று கடந்த ஆண்டுதான் சட்டம் கொண்டுவரபட்டது. ஆனால் தெரேசா பெண்களின் திருமண வயதை 21 ஆக மாற்ற வேண்டும் என்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் குரலெழுப்பியிருக்கிறார்.
பெண்குழந்தைகளை வளர்ப்பதும் பாதுகாப்பதும் கஷ்டமாக இருப்பதால் அந்நாட்டில் பெற்றோர்களே தங்கள் குழந்தைகளுக்கு 12 வயதிலேயே மணமுடித்து அனுப்பி விடுகிறார்கள். எனவே பல சிறுமிகள் தங்கள் கைகளில் கைக்குழந்தையுடன் இருப்பதை அங்கு காணமுடியும். தெரேசாவின் தைரியமான இந்த நடவடிக்கை இவருக்கு மிகப்பெரிய எதிர்ப்புகளை சம்பாதித்து கொடுத்திருக்கிறது. பல கொலை மிரட்டல்களும் இவருக்கு வந்தவண்ணம் இருக்கின்றன. ஆனால் எதற்கும் அஞ்சாமல் தனது பணியை தொடர்கிறார் தெரேசா!