சென்னை: சவுக்கு சங்கரின் பேட்டியை ஒளிபரப்பியதால் கைது செய்யப்பட்ட பெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரசின் முறைகேடுகளை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் ஊடகத்துறையினரை காவல்துறையைக் கொண்டு அடக்குவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
திமு கஅரசுக்கு எதிராகவும், முதலமைச்சர் குடும்பத்தினர் குறித்தும் செய்திகள் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் சவுக்கு சங்கர். இவர் சமீபத்தில் ரெட்பிக்ஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில், காவல்துறை உயா் அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவதூறாகப் பேசியிருந்தார். இந்த வழக்கில் சவுக்கு சங்கரை நள்ளிரவு கைது செய்த காவல்துறையினர், இந்த பேட்டியை ஒளிபரப்பு செய்த, ரெட்பிக்ஸ் எடிட்டர் பெலிக்ஸ் ஜெரால்டை டெல்லியில் கைது செய்து, திருச்சி அழைத்து வரப்பட்டு திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள மாவட்டக் காவல்துறையினா் கணினிசாா் குற்றவியல் பிரிவு அலுவலகத்தில் (சைபா் கிரைம்) பெலிக்ஸ் ஜெரால்ட் ஆஜா்படுத்தப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. பின்னா் மாலையில் அவா் திருச்சி கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டாா். மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணைக்கு பிறகு பெலிக்ஸ் ஜெரால்டை வரும் 27 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதையடுத்து பெலிக்ஸ் ஜெரால்டு திருச்சி மத்திய சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டாா்
இந்த நிலையில், பெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் திருச்சி காவல்துறை அதிகாரிகள் இன்று (மே. 14) காலை சோதனையில் ஈடுபட்டனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பெலிக்ஸ் ஜெரால்டின் வீடு மற்றும் அலுவலகத்தில் திருச்சி போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.
சவுக்கு சங்கரின் அவதூறு பேட்டியை தனது யூடியூப் சேனலில் ஒளிபரப்பிய நிலையில், அது தொடர்பான ஆவணங்கள், மின்னணு சாதனங்கள் உள்ளிட்டவை இருக்கிறதா என்று தேடுதல் பணி நடைபெறுவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஃபெலிக்ஸ் ஜெரால்டின் வீட்டிற்கு இன்று காலை சென்ற போலீஸார் அவரது வீட்டில் சோதனை நடத்துவதற்கான நீதிமன்ற அனுமதியை காண்பித்தனர். அவர்களை வாசலிலேயே தடுத்து நிறுத்திய ஃபெலிக்ஸ் ஜெரால்டின் மனைவி ஜேன் ஆஸ்டின், “நீங்க எதையாவது உள்ளே வெச்சுட்டு போயிட்டா என்ன ஆகுறது?” என்று கேள்வி எழுப்பினார். அதன்பின். “உங்களை நாங்க செக் பண்ணணும். உள்ள எத்தன பேரு வரப்போறீங்க?” என்று அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினார் ஆஸ்டின். அவருக்கு உரிய பதில்களை பொறுமையுடன் போலீஸார் கூறினர். அதன் பின் சோதனைக்கு போலீஸார் அனுமதிக்கப்பட்டனர்.