கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும் திரைத்துறையைப் பொறுத்தவரையில் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனால் ஃபெப்சி தொழிலாளர்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.

திரைப்படத் தொழிலாளர்களின் நிலை குறித்து, அவர்களுக்கு உதவ நடிகர் – நடிகைகள் என அனைவரும் முன்வர வேண்டும் என்று பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிக்கை வெளியிட்டிருந்தார் .

இந்த அறிக்கை வெளியானவுடனே பலர் நிதியுதவியாகவும், பலர் அரிசி மூட்டைகளாகவும் வழங்கினார்கள். இதை பெப்சி அமைப்பு அறிக்கையாக வெளியிட்டுள்ளது.

தென்னிந்தியத் திரைப்பட தொழிலாளர்கள்‌, சம்மேளனத்தைச் சேர்ந்த 25,000 உறுப்பினர்களில்‌ 18,000 உறுப்பினர்கள்‌ தினக்கூலிகள்‌ ஆவார்கள்‌. இவர்கள்‌ யாருக்கும்‌ ரேஷன்‌ கார்டுகள்‌ இல்லை.

‘பெப்சி’ மூலமாகவோ அல்லது திரைப்படத் தொழிலாளர்களின்‌ நலவாரியம்‌ மூலமாகவோ அல்லது நேரடியாகவோ உதவி வழங்கி அவர்களைப் பசிப்பிணியிலிருந்து காப்பாற்றும்படி தாழ்மையுடன்‌ கேட்டுக்கொள்கிறோம்‌.

ரஜினிகாந்த்‌ ரூ.50 லட்சம், கமலஹாசன்‌ ரூ.10 லட்சம், சிவகுமார்‌, சூர்யா, கார்த்தி ஆகியோர்‌ ரூ.10 லட்சம், தனுஷ்‌ 15 லட்சம், விஜய்‌ சேதுபதி, சிவகார்த்திக்கேயன்‌, உதயநிதி ஸ்டாலின்‌ தலா ரூ.10 லட்சம், இயக்குநர்‌ ஷங்கர்‌ ரூ.10 லட்சம், தயாரிப்பாளர்‌ லலித்குமார்‌ ரூ.10 லட்சம் என மொத்தமாக ரூ.1,59,64,000 நிவாரணம் வழங்கியுள்ளனர்.

தயாரிப்பாளர்‌ தாணு 250 அரிசி மூட்டைகள், சூப்பர்‌ குட்‌ பிலிம்ஸ்‌ சார்பில்‌ 275 அரிசி மூட்டைகள்‌, கே.ஜே.ஆர்‌.ராஜேஷ்‌ 1,000 (10 கிலோ) அரிசி மூட்டைகள்‌, பார்த்திபன்‌ 250 அரிசி மூட்டைகள்‌, அருள்நிதி 200 அரிசி மூட்டைகள்‌ என மொத்தமாக 1,983 (25 kg) நிவாரணம்‌ வழங்கியுள்ளனர்‌. ஆனால்‌ 25,000 உறுப்பினர்கள்‌ கொண்ட நமது சம்மேளனத்திற்கு இந்த நிவாரணம்‌ 1 நபருக்கு 25 அரிசி மூட்டை, ரூ.500 உதவிப் பணம்‌ கொடுப்பதற்குப் போதுமானதாக இல்லை.

25,000 தொழிலாளர்கள்‌ உள்ள இந்தி திரைப்பட உலகில்‌ சல்மான் கான்‌ என்ற ஒரு நடிகரே ஒவ்வொரு தொழிலாளிக்கும்‌ ரூ.5,000 உதவிப்பணம்‌ என்ற அளவில்‌ ரூ.13 கோடி நேரடியாகத் தொழிலாளர்களின்‌ வங்கிக் கணக்கில்‌ செலுத்தியுள்ளார்‌.

பிரபாஸ்‌ 4 கோடி ரூபாய் கொடுத்தார், பவண்‌ கல்யாண்‌ 2 கோடி ரூபாய் கொடுத்தார்‌, நாகர்ஜூனா 1 கோடி ரூபாய் கொடுத்தார்‌

இந்த இக்கட்டான முன்னுதாரணம்‌ இல்லாத சிரமமான நிலையில்‌ நமது திரைப்படத் தொழிலாளர்களைக் காப்பாற்ற நிதி அளிப்பீர்‌ என எங்களது திரைப்பட சகோதரர்களை மீண்டும்‌ கைகூப்பிக் கேட்டுக்கொள்கிறோம்‌”என பெப்சி அமைப்பு தெரிவித்துள்ளது.