நேட்டோ உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு துருக்கியில் இருந்து அமெரிக்கா திரும்பிய அதிபர் டொனால்ட் டிரம்ப், கத்தார் பரிசாக வழங்கிய புதிய சொகுசு விமானத்தை பயன்படுத்தாமல், பழைய ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்திலேயே பயணம் செய்தார்.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இந்த திடீர் மாற்றம் நடந்துள்ளது. ஆனால் இதற்கான காரணத்தை வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக விளக்கவில்லை.

அதிபராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற பிறகு, கத்தார் வழங்கிய போயிங் 747-800 விமானத்தை தனது தேவைகளுக்கு ஏற்ப மாற்றியமைக்க டிரம்ப் உத்தரவிட்டிருந்தார். புதிய ஏர் ஃபோர்ஸ் ஒன் தயாராகும் வரை அதைப் பயன்படுத்துவேன் என்றும் அவர் கூறியிருந்தார்.

சுமார் 400 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் இந்த விமானம் மேம்படுத்தப்பட்டிருந்தாலும், அதன் பாதுகாப்பு வசதிகள் குறித்து நிபுணர்கள் கவலை தெரிவித்திருந்தனர். பழைய ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானங்களில் உள்ள ஏவுகணை கண்டறிதல் மற்றும் எதிர்ப்பு பாதுகாப்பு அமைப்புகள் இதில் இல்லை என்று கூறப்பட்டது.

சமீபத்தில் ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, அமெரிக்கா ஈரான் மீது புதிய தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடியாக கத்தார் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகின.

இந்த சூழலில், “ஈரானின் இலக்கு பட்டியலில் நான்தான் முதன்மையான நபர்; என்னைக் கொல்ல முயற்சி செய்யலாம்” என்று டிரம்ப் கூறியிருந்தார்.

புதிய விமானத்தை பயன்படுத்தாதது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, பாதுகாப்பு காரணங்களே முக்கியம் என டிரம்ப் தெரிவித்தார்.

இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஸ்டீவன் செங் கூறுகையில், “புதிய ஏர் ஃபோர்ஸ் ஒன் மிகவும் நவீன பாதுகாப்பு வசதிகளுடன் உள்ளது. அதிபரின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. டிரம்ப் மீது பல்வேறு அச்சுறுத்தல்கள் இருப்பதை நாங்கள் அறிவோம். அவற்றை சமாளிக்கத் தயாராக இருக்கிறோம்” என்றார்.

இதற்கிடையில், கத்தார் வழங்கிய சொகுசு போயிங் 747-800 விமானம் துருக்கியில் இருந்து புறப்பட்டு, இங்கிலாந்தின் ஆர்ஏஎஃப் மில்டென்ஹால் விமான தளத்தில் தரையிறங்கியதாக விமான கண்காணிப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.